• Sun. May 12th, 2024

100 திருக்குறளை தலைகீழாக சொல்லி அசத்திய சிறுவன்

Byவிஷா

Feb 21, 2024

கோவையில் 7 வயதுடைய சிறுவன், 100 திருக்குறளை தலைகீழாக சொல்லி அனைவரது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் பெற்று வருவது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
கோவை வெள்ளலூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி பிரசாந்த், ஜீவிதா . இவர்களுக்கு 7 வயதில் கவின் சொற்கோ என்ற மகன் இருந்து வருகிறார். இச்சிறுவன் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். இவனுக்கு சிறுவயது முதலே படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதிலும் திருக்குறள் படிப்பதில் கொள்ளைப்பிரியம். தினமும் திருக்குறள்களை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். சிறுவயது முதலே இச்சிறுவனுகு நல்ல நினைவாற்றல் இருப்பதன் காரணமாக கடினமான திருக்குறள்களை கூட நினைவில் வைத்துக்கொள்கிறான். இவரது திறனை ஊக்குவிக்க அவனது பெற்றோர் அதற்கேற்ப திருக்குறள்களை சொல்லித் கொடுத்து வந்தனர்.
அதன் விளைவாக தற்போது 100 முதல் 1 வரையுள்ள 100 திருக்குறள்களை தலைகீழ் வரிசையில் சொல்லி அசத்துகிறான். 1 முதல் 100 வரை வரிசையாக குறள்களை சொல்வது, வரிசை எண்களை கூறினால் அந்த எண்ணிற்கான குறளை அப்படியே சொல்வது, அதிகாரத்தின் பெயரை கூறினால் அதிலுள்ள 10 குறள்களையும் மடமடவென சொல்வது என திருக்குறளை பல்வேறு வகையிலும் கவின் சொற்கோ சொல்கிறான். திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு போட்டி உட்பட பல போட்டிகளிலும் பரிசுகளை கவின் சொற்கோ பெற்று வருகிறான்.
இதுகுறித்து கவின் சொற்கோ ஆர்வமுடன் தெரிவித்ததாவது..,
“எனது பெற்றோர் பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி தமிழ், ஆங்கில கதைகள், திருக்குறள், பொது அறிவு தகவல்கள் என பலவகையான புத்தகங்களை படிக்கச் சொல்லி தந்து வருகின்றனர். திருக்குறள் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது வரை 100குறள்களை படித்து முடித்துள்ளேன். அதை எப்படி கேட்டாலும் தவறில்லாமல் சரியாக சொல்வேன். 1330 திருக்குறளையும் படிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என சிறுவன் கூறியுள்ளான்.
7 வயது சிறுவன் கவின் சொற்கோ 100 திருக்குறள்களை தலைகீழாக தெளிவான உச்சரிப்புடன் பிழையில்லாமலும் சொல்லி அசத்தி வருகிறான். இவனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *