• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கியது

ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்குகிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
மருத்துவர்களை விசாரிக்கும்போது மருத்துவ குழு வல்லுனர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரையின் படி 6 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக விசாரணையை அடுத்துகட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர்.

முடிவில் அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் குறுக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்ய உள்ளார். இந்த விசாரணையின் போது எய்ம்ஸ் பரிந்துரைத்த மருத்துவர்கள் குழு வீடியோ கான்பரசிங் மூலமாக பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.