அதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டதால் மீண்டும் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான கோவை செல்வராஜ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ அவர்கள் மட்டுமே இன்று மாவட்டச் செயலாளர்களாகவும் இருக்கிறார்கள். கட்சியை எடப்பாடி பழனிசாமி அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அதிமுகவின் சட்டதிட்ட விதிகள் பற்றி எதுவுமே தெரியாது. தனது எம்.பி. பதவியும் பறி போய்விடும் என்பது கூட தெரியாமல் அவர் இப்படி பேசி வருகிறார்.
ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் சென்னைக்கு வருகிறோம் எனக் கூறியும், யாரும் வரவேண்டாம், ஊரிலேயே இருங்கள் பார்த்துக் கொள்வோம் என்று ஓபிஎஸ் அமைதிப்படுத்தி வைத்திருக்கிறார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் விஸ்வரூபம் எடுத்து கட்சியை வழிநடத்துவார். ஆயிரம் சண்முகம் வந்தாலும் அண்ணா திமுகவை கைப்பற்ற முடியாது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் முதுகில் குத்தி துரோகம் செய்துவிட்டார்.ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு நடத்த முடியாது. ஜூலை 11ல் பொதுக்குழு என்பது கனவு மட்டுமே; அது நனவாகாது.
இன்னும் ஒரு மாதத்தில், ஓபிஎஸ் தலைமையில் கட்சியை நாங்கள் வழி நடத்துவோம். விரைவில் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமே
