பண்டிகை கால முன்பணம் மற்றும் 40% போனஸ் வழங்க கோரி கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜான் தலைமை வகித்தார்.

சிஐடியு மாவட்ட பொருளாளர் வேலுசாமி, டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் செந்தில் பிரபு, பொருளாளர் ராமகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது ஜான் கூறுகையில், தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகத்தில் 25 ஆயிரக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர வேலை, வார விடுமுறை இல்லை. 480 நாள் பணியாற்றியவர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.

மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டி திரும்பப்பெறும் திட்டத்தால் ஊழியர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ், 20% கருணைத் தொகை சேர்த்து 40 சதவீதம் வழங்கிட வேண்டும். தீபாவளி பண்டிகை கால முன்பணம் ரூ. 20,000 வழங்கிட வேண்டும். இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது”. என்றார். இதில் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.