• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது?அன்புமணி இராமதாஸ்

ByA.Tamilselvan

May 4, 2023

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச்சாராய வணிகர்களிடையே நிலவும் போட்டியால் ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் வாங்கினால், இன்னொரு பாக்கெட் சாராயம் இலவசம், இரு பாக்கெட் சாராயம் வாங்கினால் முட்டை இலவசம் என்றெல்லாம் சலுகைகள் வழங்கப்படுவதாக DT Next ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தடையின்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆந்திர – தமிழ்நாடு எல்லையில் உள்ள கிராமங்களில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம், எந்தத் தடையும் இல்லாமல் ஊர்திகள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. எந்தெந்தப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்ற விவரங்கள் அந்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குக் கூட துல்லியமாகத் தெரிகிறது.
ஆனால், அவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயரளவில் ஒரு சிலரை கைது செய்யும் காவல்துறை மீதமுள்ளவர்களின் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ! மதுவில்லா மாநிலம் தான் மக்களின் எதிர்பார்ப்பு. அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை மதிக்காத அரசு, புதுப்புது வடிவங்களில் மது விற்பனையை அறிமுகம் செய்து வருகிறது. சந்துக்கடைகள் என்ற பெயரில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் கள்ளச்சாராய விற்பனையையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால், நாடு விரைவில் சுடுகாடு ஆகிவிடும். சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதையும், சந்துக்கடைகளில் டாஸ்மாக் மது விற்கப்படுவதையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்குக் காரணமானவர்களை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.