கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் கிஷான் குமார் ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அண்ணாமலை,
தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும், மத்திய அரசு மீது தொடர்ந்து பழி சுமத்தி வருவதாகவும் ,எடுத்துக்காட்டாக மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் ஒரு மரத்தை அகற்றுவதற்கு தமிழக அரசு 8 மாத காலம் இழுத்தடித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், மாநில அரசு இந்த அளவிற்கு பொறுப்பற்று செயல்பட்டால் திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படும் ,இதனால் வளர்ச்சி பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் என கூறினார்.
‘மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான முக்கியத்துவம் அல்லது நிதி உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை என கூறுவது அரசியல் சார்ந்த கருத்தாகும். பட்ஜெட் பணிகளை மேற்கொள்ளும் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள நிதி செயலாளர்கள் கலந்து ஆலோசித்து தான் நிதி பங்கீடுகளை மேற்கொள்கின்றனர்.அவர்களிடத்தில் எந்த குழப்பமும் இல்லை. தமிழ்நாடு எந்த விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுகளை விட அதிக அளவு தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு மாநில அரசும், மாநில அரசும் தலா 15.4 சதவீதம் நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு மட்டுமே 100% நிதி ஒதுக்க வேண்டும் என்பது போல பொய்யான குற்றச்சாட்டை தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மக்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு வழங்கக்கூடிய நிதி பங்கீடு உரிய வகையில் அந்தந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது’ என அண்ணாமலை தெரிவித்தார்.