• Wed. Mar 19th, 2025

மகாராஷ்டிராவில் பெண் வேட்பாளரின் ஆச்சர்யப்படுத்தும் வாக்குறுதிகள்

Byவிஷா

Apr 5, 2024

மகாராஷ்டிராவில் அகில இந்திய மனிதநேய கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் ரேஷன்கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் கொடுக்கப்படும் என வித்தியாசமான வாக்குறுதியை அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு கட்சிகளும் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அடுக்கடுக்காக கூறி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் அகில இந்திய மனிதநேய கட்சி சார்பில் பெண் வேட்பாளர் வனிதா ராவத் சந்திரபூர் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இவர் வாக்காளர்களுக்கு வித்தியாசமான வாக்குறுதி ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது ரேஷன் கடைகளின் மூலம் ஏழை குடிமகன்களுக்கு எம்பி நிதியின் வாயிலாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் கொடுக்கப்படும்.
மேலும் கிராமங்கள் தோறும் பீர் கடைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து அவரிடம் எழுப்பிய கேள்விக்கு மிகவும் ஏழ்மையாக இருக்கும் மக்கள் அதிகமாக உழைப்பதாகவும், ஆனால் அவர்களுக்கு தரமான மதுபானங்கள் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளார். எனவே அவர்களை மகிழ்விக்க வெளிநாட்டு மதுபானங்களை கொடுக்க உள்ளதாகவும், அவர்களை சந்தோஷப்படுத்துவது தான் தனது ஒரே குறிக்கோள் என்றும் கூறியுள்ளார்.