• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இன்று சூரசம்ஹாரம் : முருகன் கோவில்களில் குவியும் பக்தர்கள்

Byவிஷா

Nov 7, 2024

கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால், திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு முருகன் கோயில்களில் கடந்த 2-ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. இந்நிலையில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறவுள்ளது. அதனையொட்டி சூரசம்ஹார நிகழ்வுகளைக் காண முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இந்நிலையில் கோயிலின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் பெருவிழா யாகசாலை பூஜையுடன் கடந்த 2-ம் தேதி தொடங்கியது.
சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருகன், வள்ளி, தெய்வானை, பெருமாள், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்த பக்தர்கள் குவிந்துள்ளனர்.
5-ம் நாள் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று கோயில் கலையரங்கில் இசைக்கச்சேரிகள் நடைபெற்றன. அப்போது சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுமி தியா பல்வேறு முருகன் பாடல்களை அழகான முக பாவனைகளுடன் பாடி, அங்கிருந்த பக்தர்களை பக்தி பரவசத்தில் மெய்சிலிர்க்கவைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி சிறுமி தியாவை வெகுவாக பாராட்டினர்.
இதேபோல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.