அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பலாத்கார வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.
மேலும் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது, அரசு அனுமதியின்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்த சென்னை காவல் ஆணையர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது..சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை, முதல் தகவல் அறிக்கை ஆவணம் எவ்வளவு நேரம் டவுன்லோட் செய்யும் வகையில் இருந்தது? மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.