தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 500க்கு மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர துப்புரவு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தனியார் ஏஜென்சி மூலம் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பிரசவ வார்டு கட்டிடத்தில் லிப்ட் ஆப்ரேட்டராக செல்வராஜ்(வயது37) என்ற மாற்றுத் திறனாளி வேலை செய்து வருகிறார்.

லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றிய செல்வராஜை சூப்பிரவைசர்கள் டார்ச்சர் கொடுத்ததாகவும், அவரை பணியிடமாற்றம் செய்ததாவும் தெரிகிறது. மேலும் கடந்த 3 நாட்களாக வேலைக்கு வந்த செல்வராஜிடம் வருகைபதிவேட்டில் கையெழுத்து வாங்கவில்லை. இதனால் மனமுடைந்த ஒப்பந்த பணியாளர் செல்வராஜ், பிரசவ வார்டு கட்டிடத்தின் 5வது மாடியில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். இதனைக்கண்ட பொதுமக்கள் மற்றும் இதர பணியாளர்கள் கீழே இறங்கி வரும்படி கூச்சலிட்டனர். அப்போது சில பணியாளர்கள் லாவகமாக மாடிக்கு சென்று செல்வராஜை பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன், தற்கொலை செய்ய முயன்ற பணியாளரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தனியார் ஏஜென்சிக்கு நியமிக்கப்பட்டுள்ள சூப்பிரவைசர்கள் பல்வேறு டார்ச்சர் செய்து வருவதாக புகார் கூறினார். இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் சூப்பிரவைசர்கள் ஒருமையில் பேசுவதாகவும், பிடிக்காத நபர்களை பணிமாற்றம் செய்வதாகவும், பணியாளர்களிடம் பணம் வசூல் செய்வதாகவும் அடுக்கடுக்கான புகார்களை கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து பணியாளர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
