பிரதமர் மோடியிடம் டென்மார்க்கில் செய்தியாளர்கள் திடீரென கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தற்போது ஐரோப்பிய பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் செல்ல இருக்கிறார். இந்தியா திரும்பும் முன் பிரான்சில் முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போரில் ரஷ்யாவை இந்தியா எதிர்க்காத நிலையில் ஐரோப்ப நாடுகள் இந்தியா மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கு இடையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்த பயணத்தில் பிரான்சில் அதிபர் மேக்ரூன் உடன் மோடி சந்திப்பு நடத்த உள்ளார். முன்னதாக டென்மார்க் பயணத்தின் போது பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் மேட் உடன் சந்திப்பு நடத்தினார். இரண்டு நாட்டு உறவு, பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்தனர். அங்கு வசிக்கும் இந்தியர்கள் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியா வரும்படி அவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
அதன்பின் டென்மார்க் ராணி மார்க்ரெத் II உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். இவர்கள் ஒன்றாக உணவு சாப்பிட்டனர். அதேபோல் ஜெர்மனியிலும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தனர். உக்ரைன் ரஷ்ய போருக்கு இடையில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் இந்த பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி டென்மார்க்கில் இருக்கும் போது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். டென்மார்க் சென்று உள்ள இந்திய செய்தி நிறுவன செய்தியாளர்கள் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முயன்றனர். அவர் காருக்கு செல்லும் போது அருகில் சென்ற செய்தியாளர்கள் சார் எங்களை உள்ளே விடவில்லை என்று பட்டென மைக்கை நீட்டி சொன்னார்கள். இதை பிரதமர் மோடி எதிர்பார்க்கவில்லை.
சட்டென செய்தியாளர்கள் எங்கிருந்தோ வந்ததை அவர் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து ஓ மை காட்.. நான் போய் அவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்க வேண்டுமா? என்று சட்டென பிரதமர் மோடி கூறினார். அதன்பின் தொடர்ந்து இந்தியில் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அங்கிருந்து பிரதமர் மோடி கிளம்பி சென்றார். பொதுவாக பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பை நடத்த மாட்டார். அவர் பிரதமராக பதவி ஏற்றபின் நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து தனியாக பதில் அளித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.