திண்டுக்கல்லில் நெகிழி பைகளின் பயன்பாட்டை குறைக்கவும், மஞ்ச பைகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும், நீர்நிலைகளில் கொட்டப்படும் நெகிழி பொருட்களை அப்புறப்படுத்தவும் “நெகிழி சேகரிக்கும் இயக்கம்” உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தின் மூலமாக இன்று (13.09.25) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் இளமதி மற்றும் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் மாநகராட்சிக்கு சொந்தமான நீர் நிலைகளுடன் கூடிய நடைபயிற்சி பூங்காக்கள் அமைந்துள்ள சிலுவத்தூர் குளம், கோபால சமுத்திர குளம் உட்பட 4 குளங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், என்.எஸ்.எஸ் மாணவர்கள், தன்னார்வலர்கள், நேரு யுவ கேந்திரா மற்றும் தூய்மை பணியாளர்கள் கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
மேலும், குளங்களை சுற்றி உள்ள சுவர்களில் மாணவ, மாணவியர்கள் நெகிழி பயன்பாட்டிற்கு எதிராக ஓவியம் வரைந்து வருகின்றனர்.

மேலும், குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சியிலுள்ள குளங்கள் மற்றும் குளங்களுடன் கூடிய பூங்காக்களை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, அதற்கான பணிகள் தொடங்குவதற்கு முன்பாக குளங்கள் மற்றும் குளங்களை சுற்றி உள்ள பகுதிகள் மாணவர்கள், தன்னார்வலர்கள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.