• Thu. Mar 27th, 2025

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி அறிக்கை

Byஜெ.துரை

Feb 19, 2024

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அதில், தமிழ் திரைபடங்களின் படப்பிடிப்பிற்கு ஏதுவான படபிடிப்பு தளங்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் தொழில்நுட்பம் ஆகியவை போதுமான அளவிற்கு தமிழ் நாட்டில் இல்லாத காரணத்தினால் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது.

அதனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விடுகிறது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் செலவீனங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனை கட்டுபடுத்த பல தயாரிப்பாளர்கள் கேட்டுகொண்டதின் பேரில் , அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சென்னையில் ஒரு சினிமா நகரம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

அந்த கோரிக்கையை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து மாண்புமிகு முதலமைச்சர் சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே 150 ஏக்கரில் புதிய சினிமா நகரம் அமைக்கவும், அதில் VFX, அனிமேஷன், LED திரை, நட்சத்திர ஓட்டல்கள் என அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகள் கூடிய படப்பிடிப்பு தளங்கள், படத்தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கான கட்டமைப்புகளுக்காகவும் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் budget கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.

அதற்கு தமிழ் திரையுலகம் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும், எங்களது கோரிக்கையை உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், என்றும் திரை உலகினருக்கு உறுதுணையாக இருந்து வரும் மாண்புமிகு. செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் தமிழ் திரையுலகின் சார்பாக எங்களது நன்றியினை இரு கரம் குவித்து தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.