இருமல் மருந்தால் மத்திய பிரதேசத்தில் 21 குழந்தைகள் பலியான நிலையில், ஸ்ரீசென் பாமா நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தை உட்கொண்ட பிறகு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதன் காரணமாக 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருந்து, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவர்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் பாமா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.
கடந்த 2-ஆம் தேதி பரிசோதனை நடத்தப்பட்ட போது, இந்த மருந்தில் டைஎத்திலீன் கிளைசால் என்ற நச்சு ரசாயனம் 48.6சதவீத அளவில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இந்த மருந்தை கலப்படமாக அறிவித்தது. மேலும், தமிழகத்தில் அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதே மருந்து ஒடிசா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பப்பட்டன. ஸ்ரீசென் பாமா நிறுவனத்தின் உற்பத்தி இடம் கடந்த 3-ம் தேதி மூடப்பட்டது. மேலும், அதன் மருந்து உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவன மருத்துவர் பிரவீன் சோனி ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், நிறுவன உரிமையாளர் எஸ். ரங்கநாதன் (வயது 75) என்பவரும் மத்தியப் பிரதேச போலீசாரால் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விசாரணைக்காக சிந்த்வாரா மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த மருந்து தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொண்டு வருகிறது.
ஸ்ரீசென் பாமா நிறுவன உரிமையாளர் கைது
