

அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஸ்ரீ மகா பெரியவர் என்று அனுஷ வைபவ விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ வைபவத்தை முன்னிட்டு, சிறப்பு சொற்பொழிவு மதுரை எஸ். எஸ். காலனி எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். இதில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஸ்ரீ மஹா பெரியவா மகிமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது, சும்மா இரு சொல்லறு என்ற வார்த்தை தான் அருணகிரிநாதர் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. முருகப்பெருமான் அவர் நாக்கில் ஓம் என்ற வார்த்தை எழுதிய பிறகு தான் திருப்புகழ் எழுதினார். கௌமாரம் நெறிகளுக்கு ஆதார சுருதி அருணகிரிநாதர் மற்றும் திருப்புகழ். சன்னியாசிகளுக்கு மௌனமாக இருப்பதினால் மனவலிமை அதிகம். ஒருமுறை மகா பெரியவர் மௌன விரதம் இருந்தபோது முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி வந்து சந்திக்க முடியாமல் திரும்பிச் சென்றார். மற்றொரு முறை மௌன விரதம் இருந்தபோது சங்கரன் என்ற ராணுவ வீரர் போரில் இரு கண் பார்வையையும் இழந்தவர் வந்தார். மௌனத்தில் இருந்த போதிலும் சங்கரா என்று பெயர் சொல்லி அழைத்தார். பிரசாதம் வழங்கினார். பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது ஒருபோதும் மௌனத்திலிருந்து பெரியவர் பேசியதில்லையே இப்போது மட்டும் ஏன் பேசினார் என்று கேள்வி எழுந்தது. அப்போது அவர் சொன்னார் தேசத்திற்காக இரண்டு கண்களையும் இழந்தவர். என் சத்தம் கேட்டால் தான் நான் இருக்கிறேன் என்று அவருக்கு தெரியும். அதனால் தான் என் மௌனத்தை கலைத்தேன் என்றார். ஆச்சாரம் என்ற வார்த்தைக்கு நெறிப்பாடு என்று பொருள். அதை முறைப்படி கடைப்பிடித்தவர் மகா பெரியவர். உடல் தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்றார் வள்ளுவர். எல்லா சமூகத்தையும் எல்லா மதத்தினரையும் இஸ்லாமியர் கிறிஸ்தவர் என்று பாகுபாடு பார்க்காமல் சமமாக மதித்தவர் ஸ்ரீ மகா பெரியவர். ஒரு முறை முன்னாள் நீதிபதி மு.மு. இஸ்மாயில் மடத்திற்கு வந்தபோது அவருக்கு சந்தனத்தை பிரசாதமாக வழங்கினார். அப்போது அவர் சொன்னது கடவுள் இருந்தால் இவரை போலத்தான் இருப்பார் என்றார். திருவாரூரில் ஒரு நாவிதர் பெரியவரிடம் மனசு கஷ்டமாக இருக்கு நிம்மதி இல்லை என்று சொன்னபோது அவரை ஆசீர்வதித்தார். அவர் கேட்டுக்கொண்டபடி தன் பாத ரட்சையை வழங்கினார். அதை தூக்கி தலையில் வைத்துக் கொண்டார். மறுமுறை அதே ஊருக்கு மகா பெரியவர் வந்தபோது அதே நாவிதர் அவர் முன்னாள் வந்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டபோது சாமி நீ உன் கட்டையை கொடுத்த இந்த கட்டை நன்றாக இருக்கிறது என்று சிரிப்போடு சொன்னார். இறைவனிடம் நாம் பரிபூரணமாக சரணடைந்து விட வேண்டும் அவர் நம்மை பார்த்துக் கொள்வார் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் வாழ்வில் தான் சொன்னதை வாழ்க்கையில் கடைபிடித்தார். நம் உச்சத்திற்கு வர வேண்டும் என்றால் தினமும் தாய் தந்தையை வணங்க வேண்டும் ஏதேனும் ஒரு உதவியை தினமும் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ மகா பெரியவர். தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு என்றார். இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். முன்னதாக ஸ்ரீ மஹா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

