கோயம்புத்தூர் மாவட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்–2026 தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்தம் 25,74,608 பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 19.12.2025 முதல் 18.01.2026 வரை ஒரு மாத காலத்திற்கு கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் (Claims & Objections) பெறப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
01.01.2026 அன்று 18 வயது நிறைவு செய்யும் இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் புதியதாக பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம்–6 மூலம் விண்ணப்பிக்கலாம். அதேபோல், ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், மாற்றுத்திறனாளி குறியீடு செய்தல் மற்றும் அடையாள அட்டை தொலைந்த நிலையில் புதிய அடையாள அட்டை பெற விரும்புவோர் படிவம்–8 மூலம் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர்களின் வசதிக்காக, 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நாட்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 1,062 வாக்குச்சாவடி மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும், அனைத்து முகாம்களிலும் வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்பட உள்ளன.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி, தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து, பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, 17.02.2026 அன்று வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 1950 (0422) என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




