• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோவை, நீலாம்பூர் பகுதியில் ‘மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம்

BySeenu

Jul 26, 2024

மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுக்கும் வகையில் அம்மாநிலத்தின் தொழில்துறை சார்பில் ‘மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் கோவை, நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

இதில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கலந்து கொண்டு, தொழில்துறையினருக்கு வழங்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் மாணியங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு, மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பும் விடுத்தனர்.

தொழில் துறையினருக்கான வாய்ப்புகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், அரசு உதவிகள் உள்ளிட்ட தொழில் துறையினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து இக்கருத்தரங்கில் விளக்கப்பட்டது.

இதில் கோவை, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில், இன்ஜினியரிங், ஆட்டோமொபைல்ஸ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தகவல் தொழில்நுட்பத்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மத்திய பிரதேச முதல்வர் மோகன்யாதவ் சிறப்புரையாற்றுகையில், ‘எல்லோருக்கும் வணக்கம்’ என தமிழில் தனது உரையத் துவங்கினார்.

‘இயற்கை வளம், கனிம வளம், கலாச்சாரம் என அனைத்திலும் தமிழகத்திற்கும் மத்திய பிரதேசத்திற்கும் ஒற்றுமை உள்ளது.

கோவையும் திருப்பூரும் ஜவுளித்துறையின் மையம் என கூறுவதற்கு காரணம் தொழில் துறையினரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் தான். ஆசியாவில் முக்கிய ஜவுளி உற்பத்தி மையமாக திருப்பூர் உள்ளது. இதேபோல், ஆட்டோமொபைல், பொறியியல் மற்றும் பம்ப்பு உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் ஆகும். ஜவுளி தொழிலுக்கு உகந்த சுற்றி சூழல் அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

ஜவுளி தொழிலின் மூலப் பொருளாக விளங்கும் பருத்தி உற்பத்தி மத்திய பிரதேசத்தில் அதிகரித்திள்ளது. பெரும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. தொழில் நுட்ப ஜவுளி உற்பத்தியும் முன்னேறி வருகிறது. இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. PLI திட்டம் மற்றும் PM Mitra ஜவுளி பூங்கா ஆகியவை மத்திய பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால் ஜவுளித்துறை அதிக வளர்ச்சியை கண்டு வருகிறது. புதிய தொழில் விதிமுறைகளை அமல்படுத்தி அதிக அளவு மானியங்களை வழங்கி வருகிறோம். பெண்களும் பாதுகாப்பாக வேலை செய்யக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்.

ஆடை வடிவமைப்பு, ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவை இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துகிறது. திறன் மேம்பாட்டுக்கான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பருத்திக்கான செலவு குறைந்த நிலம், கவர்ச்சிகரமான நிதி பலன் ஆகிய காரணிகளால் பெரிய ஜவுளி நிறுவனங்கள் மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்துள்ளன.

ஜவுளி நிறுவனங்களுக்கான மின்சார மானியம், நீர் சலுகை ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், ஆட்டோமொபைல், பொறியியல், இயந்திர உற்பத்தி ஆகியவற்றின் மையமாக மத்திய பிரதேசம் உருவாகி வருகிறது. இவற்றுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. மின்சார போக்குவரத்தில் அதிக கவனம் வழங்கப்பட்டு வருகிறது. மின் வாகன உற்பத்தி, அதன் தயாரிப்பை ஊக்குவிக்க இந்தூரில் புதிய உற்பத்தி ஆலை அமைய உள்ளது.

ஏராளமான, கனிம வளம் நீர் வளம் சுற்றுலா வாய்ப்புகள் மத்திய பிரதேசத்தில் உள்ளது. நாட்டின் மையப்பகுதியில் உள்ளதால் விமான, சாலை, ரயில் இணைப்பு பிற மாநிலங்களோடு சிறப்பாக உள்ளது. மின்சார உபரி மாநிலமான மத்திய பிரதேசத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சூரிய சக்தி மையம் அமைப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு புதிய தொழில் துவங்குவதும், தொழிலை விரிவுபடுத்துவதும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நடத்தப்பட்டஉஜ்ஜயினி மற்றும் ஜபல்பூர் மாநாட்டில் பெரும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 7,8 தேதிகளில் கோபாலில் தொழில் மாநாடு நடைபெற உள்ளது இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைக்கிறேன். பாரதப் பிரதமர் மோடியின் தலைமையில் முன்னேறி வரும் இந்திய நாட்டில், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான இணைப்பு என்றென்றும் தொடரும்’ என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கோயம்புத்தூர் மிக முக்கிய பங்கு அளித்துள்ளதாகவும், அதேபோல் மத்திய பிரதேசத்தின் தொழில் வளர்ச்சிக்கு கோயம்புத்தூரை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கு வகிக்க வேண்டும் என கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து எந்த தொழில் நிறுவனங்களையும் எடுத்துச் செல்லவில்லை எனவும், தொழில் நிறுவனங்களின் விரிவாக்க திட்டத்திற்கு முதன்மை மாநிலமாக மத்திய பிரதேசம் விளங்க வேண்டும் என்ற அடிப்படையிலே இக்கருத்தரங்கங்கள் நடத்தப்படுவதாகவும், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்களை இணைக்கும் வகையில் தொழில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு தொழில் இணைப்பு உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.