• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செங்கோட்டையனை பொதுச்செயலாளராக்க ஸ்கெட்ச்

ByPrabhu Sekar

Feb 11, 2025

ஒருங்கிணைந்த அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணி அமைய வேண்டும் என்பதுதான் டெல்லி பாஜக மேலிடத்தின் விருப்பமாம். இதன் முதல் கட்டமாகவே செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருக்கிறாராம்.

அதிமுக ஒன்றுபடுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தால் எடப்பாடி பழனிசாமியை வெளியே அனுப்பி விட்டு செங்கோட்டையனை பொதுச்செயலாளராக்கலாம் என்கிற ஸ்கெட்ச் போடப்பட்டு அதனை அரங்கேற்றம் செய்வதற்கான நிகழ்வுகள் தொடங்கிவிட்டன என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

அதிமுகவில் திடீரென எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியையே அரசியலுக்கு கொண்டு வந்த குருநாதர்தான் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்திலேயே மாவட்ட செயலாளர். எம்.எல்.ஏ. என பதவி வகித்தவர்; ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்; அவரது வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார்; ஆனால் சசிகலா குடும்பம், அதிதீவிர உண்மையான விசுவாசி செங்கோட்டையனை இன்று வரை கைவிடவில்லை.

இத்தனை ஆண்டுகள் கனத்த அமைதி காத்த செங்கோட்டையன் இப்போது திடீரென கலகக் குரல் எழுப்பி இருப்பது மிக சாதாரணமாக கடந்து போய்விடக் கூடியது அல்ல என்பதுதான். அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

இது தொடர்பாக அதிமுகவில் ஏற்கனவே போர்க்கொடி தூக்கி வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கூறுகையில், செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பியதுமே 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் பலரும் அவரை தொடர்பு கொண்டு பேசி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்; சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 12-ந் தேதி வழங்கும் தீர்ப்புக்குப் பின்னர் நிறைய மாற்றங்கள் நடக்கும் என்கிறார்.
இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் நாம் பேசிய போது, அண்ணா திமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் எதிர்பார்ப்பும் விருப்பமும்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேறிய அனைத்து சக்திகளும் ஒரே கட்சியாக இரட்டை இலை சின்னத்தின் கீழ், ஒருங்கிணைந்தால் அந்த கூட்டணியை வைத்து பாஜக டபுள் டிஜிட் எம்.எல்.ஏக்களைப் பெறலாம் என எதிர்பார்க்கிறதாம். ஆனால் இந்த ஒருங்கிணைப்புக்கு முழுமையாக எதிராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இத்தனை நாள் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை பொறுத்துக் கொண்ட டெல்லி அண்மையில் அவருக்கு மிக நெருக்கமான உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தியும் பார்த்தது; ஆனாலும் எடப்பாடி பழனிசாமியோ தமது பிடியையும் பிடிவாதத்தையும் விட்டுத் தருவதாகவும் இல்லையாம். இதனாலேயே செங்கோட்டையனை முன்வைத்து கலகம் உருவாக்கப்பட்டுவிட்டதாம்.

செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பிய உடனேயே அவருக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேட்டி கொடுத்தது எல்லாமே ஏற்கனவே போடப்பட்ட ஸ்கெட்ச்தானாம்.

தற்போதைய நிலையில் ஒருங்கிணைந்த அதிமுகவை எடப்பாடி பழனிசாமி எதிர்த்தால் அவரையும் அவரது ஆதரவாளர்களயும் வெளியேற வைத்து செங்கோட்டையனை பொதுச்செயலாளராக்குவது என்பதுதான் டெல்லி கொடுத்த ஸ்கெட்ச்.

இதனடிப்படையில்தான் இனிவரும் நாட்களில் அரசியல் விளையாட்டுகள் அனைத்தும் நடக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.