• Wed. Mar 19th, 2025

சிவகங்கை மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு -வீதி நாடகம் மற்றும் பொம்மலாட்ட நிகழ்ச்சி

ByG.Suresh

Mar 16, 2024

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் 2024 கீழ் மதுரை மாவட்டம், கிரீன் டிரஸ்ட் இணைந்து நடத்திய சிவகங்கை மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் பொம்மலாட்ட நிகழ்ச்சி இன்று 15. 03.2024 சனிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை பேருந்து நிலையம், செயின்ட் ஜஸ்டின் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்.எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காளையார் கோவில் பேருந்து நிலையம், மானாமதுரை பேருந்து நிலையம், திருப்புவனம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.

விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயண நிகழ்ச்சிக்கு மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும் கிரீன் டிரஸ்ட் நிர்வாக இயக்குநரும் எம். எஸ்.பி. குழந்தை வேல் அவர்கள் தலைமை தாங்கினார்கள். நிகழ்வில் சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் பசுமை தோழர் செல்வி. அபிநயா முன்னிலை வகித்தார்கள். நிகழ்வில் சுற்றுச்சூழல் துறையின் சார்பில் கலைக்குழுவினர் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வீதி நாடகம், பொம்மலாட்டம் மூலமாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, நீடித்த நிலையான வாழ்வியல் முறைகள், காற்று மாசு தவிர்த்தல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் துணி பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறையின் சார்பில் கிரீன் டிரஸ்ட் நிர்வாக இயக்குநரும் மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான குழந்தை வேல் செய்திருந்தார்கள்.