• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது போக்குவரத்தில் பயணிக்க ஜூன் மாதம் முதல் ஒரே டிக்கெட் நடைமுறை

Byவிஷா

May 14, 2024

சென்னையில் மெட்ரோ ரயில், பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் ஒரே டிக்கெட் நடைமுறை அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை மக்களிடையே அரசு பேருந்துகளின் பயணத்தைவிட மின்சார மற்றும் மெட்ரோ ரயில் பயணம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. எந்தவித போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ரயில் பயணம் அமைவதால் ஏராளமானோர் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். இருந்தாலும், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து ரயில் நிலையத்திற்கு வர மாநகர பேருந்து தேவைப்படுகிறது. இதனால், பயணிகள் பேருந்து, மற்றும் மின்சார ரயில்களுக்கு என தனித்தனி டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று போக்குவரத்துகளை ஒன்றிணைத்து, அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூனில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, இதற்காக தனி செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில். இதன்மூலம், கியூஆர் கோடு பயன்படுத்தி அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த செயலி மூலம், புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து, எத்தனை போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதை சரிபார்த்து, அந்த செயலி, பயணிகள் தேர்வு செய்த முறையின் அடிப்படையில் பயணத்தின் மொத்த தொகை எவ்வளவு என்பது தெரியவரும். அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த டிக்கெட் மூலம் நீங்கள் தேர்வு செய்த பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்யலாம். இந்த திட்டம் ஜூன் 2 வது வாரத்தில் இந்த திட்டம் செயல்படுத்தபடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும்.
இதற்காக ஒரு கார்டு அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுன்ட்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.