• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

“சைலண்ட்” திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Byஜெ.துரை

Nov 27, 2024

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேச பாண்டியன் இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்”படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது….

ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக்கும் நன்றி. சைலண்ட் படம் மிக மிக அழகான படம். சமயமுரளி சாரை வெகு காலமாகத் தெரியும். மிக மிக நேர்மையான மனிதர். அவர் நிறையப் பேருக்கு உதவி செய்து வருகிறார். கணேஷ் சார் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. திரு நங்கைகள் பற்றி நிறையச் சர்ச்சைகள் இருக்கிறது அதைத் தெளிவாக்குவது போல் இந்தப்படம் இருக்கும். திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும். எனக்கும் நண்பியாக திருநங்கை நமீதா இங்கு இருக்கிறார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

திருநங்கை நமீதா பேசியதாவது…..

எனக்கு வாய்ப்பு தந்த சமயமுரளி சார், இயக்குநர் கணேஷா இருவருக்கும் நன்றி. திருநங்கைகள் வாழ்க்கையை எடுத்துக்கூறும் கதை என்று சொன்னார்கள். அதனால் உடனே ஒப்புக்கொண்டேன். இந்தப்படத்தின் பாடலில் நடித்தது மகிழ்ச்சி. பாடல் மிக நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் சமய முரளி பேசியதாவது….

முதல் மேடை மிக மகிழ்ச்சியாக உள்ளது. காலேஜ் காலத்தில், மியூசிக் ட்ரூப்பில் சேர்த்துக் கொள்வார்களா? என ஏங்கியிருக்கிறேன். ஆனால் இன்று இசையமைப்பாளராக இங்கு மேடையில் நிற்கிறேன். எனக்கு வாய்ப்பு தந்த கணேஷ பாண்டிக்கு நன்றி. அவர் தான் ஊக்கம் தந்தார். என் மனைவிக்கு, என் அப்பாவுக்குத் தான் முதன் முதலில் பாடல் எழுதினேன். என் அம்மாவுக்காகப் பாடல் எழுதியதில்லை. இந்தப்படத்தில் கணேஷா பாண்டி ஒரு சிச்சுவேசன் சொன்ன போது, தாய் தான் கடவுளை விட ஒரு படி மேல் எனப் பாடல் எழுதியுள்ளேன். மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் ஆனால் ராகம் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இசையமைத்துள்ளேன் இயக்குநர் நன்றாக இருப்பதாக பாராட்டினார். ஆண்டவனுக்கு நன்றி அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் கணேஷ் பாண்டி பேசியதாவது….

சைலண்ட் என் முதல் குழந்தை. இந்த தலைப்புக்கும் எனக்கும் நிறையப் பந்தம் இருக்கிறது. சின்ன வயதில் அதிகம் பேச மாட்டேன், அதன் பிறகு வறுமை, அதன் பின் போராட்டம் இந்த அனைத்துக்கும் இந்த சைலண்ட் பதிலாக இருக்கும். ராம் பிரகாஷ் சார் இந்த வாய்ப்பிற்கு நன்றி சார். பத்திரிக்கையாளர்கள் இந்த சைலண்ட் படத்திற்கு ஆதரவு தந்து தூக்கி விட வேண்டும். இங்கு வந்து வாழ்த்திய பிரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். என் பெற்றோர் இன்று உயிருடன் இல்லை. உங்கள் அனைவரையும் என் பெற்றோராக நினைத்து வணங்குகிறேன் நன்றி என்றார்.

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது…..

உண்மையில் இது ஆச்சரியமான மேடை. ஒரு நியூஸை இரண்டு பி ஆர் ஓவிற்கு அனுப்பினால், அது பத்திரிக்கையில் வராது ஆனால், இந்த மேடையில், அனைத்து பி ஆர் ஓக்களும் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. ஹேமானந்த் அழைப்பின் பேரில் தான் இந்த விழாவிற்கு வந்தேன். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். சைலண்ட் என ஒரு ஆங்கில படம் பார்த்தேன், அந்த மாதிரி படமாக இருக்குமென நினைத்து வந்தேன். ஆனால் இந்தப்படம் மிகப்பெரிய விசயத்தைப் பேசுகிறது. திருநங்கையை வைத்து எந்த ஒரு இயக்குநரும் இவ்வளவு தைரியமாக முதல் படம் செய்ய மாட்டார்கள். நானும் என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன். இவர்கள் அதே போல் மிகவும் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். நான் சிறு வயதிலிருந்தே விமர்சனம் பார்த்து படம் பார்க்க மாட்டேன் யார் சொல்லும் விமர்சனத்தையும் கேட்க மாட்டேன். பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் படிப்பேன், தியேட்டரில் படம் பார்த்த பிறகு தான் விமர்சனம் படிப்பேன். ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை சிறு முதலீட்டு படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான். ரிவ்யூ இல்லாததால் சின்ன படங்கள் வருவதே தெரியவில்லை. மக்கள் கருத்தை வாங்கி ஒளிபரப்ப மீடியாக்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து சிறு படங்களுக்கு ஆதரவு தாருங்கள். இப்படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.