• Fri. Apr 26th, 2024

அன்பினாலே பூஜிக்கும் இரவே சிவராத்திரி -ஆன்மீக சொற்பொழிவாளர் பேச்சு

ByKalamegam Viswanathan

Feb 19, 2023

பக்தி செய்வதற்கு அன்பு ஒன்றே போதும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மகாசிவராத்திரி மற்றும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத் குரு ஸ்ரீ சங்கர விஜயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் சிவபுராணம் என்ற தலைப்பில் பேசினார் அப்போது அவர் பேசியதாவது
மகா சிவராத்திரி புண்ணிய காலம். இந்து சமயத்தில் மிக சிறப்பாக போற்றப்படுகிறது. அம்பிகைக்கு ஒன்பது இரவுகள். சிவபெருமானுக்கு ஒரு இரவு. கிருஷ்ண ஜெயந்திக்கும் மகா சிவராத்திரிக்கும் சரியாக 180 நாட்கள் என்று மகா பெரியவர் சொல்கிறார். அத்தகைய சிறப்புமிக்க மகா சிவராத்திரியை சிவபெருமானை அன்பு வடிவமாக நாம் பார்க்கிறோம் ..ஆணும் பெண்ணும் சரி சமமாக இந்த உலகில் வாழ்வதற்கு சிவராத்திரி வழிகாட்டுகிறது. இன்றைய நாளில் தான் பார்வதி தேவி சிவபெருமானை பூஜை செய்து அவருடைய உடலில் சரிபாதியை பெற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். ஆணும் பெண்ணும் சமம் என்பதை நமது சமயம் எத்தனையோ யுகங்களுக்கு முன்னால் காட்டி இருக்கிறது. பெண்ணுக்கு சரி சமமான வாய்ப்பை நமது சமயம் வழங்குகிறது என்பதை சிவராத்திரி நமக்கு காட்டுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் பெண்களை தாயாக பாவிக்கும் வாய்ப்பை நமது சமயம் வழங்குகிறது. இன்றைய நாளில் அன்பின் வடிவான கண்ணப்பருக்கு சிவபெருமான் காட்சி தந்தார். பக்தி செய்வதற்கு செல்வமோ கல்வியோ குலமோ அவசியம் இல்லை. அன்பு ஒன்றே போதும் என்பதை கண்ணப்பரின் வரலாறு நமக்கு காட்டுகிறது. கண்ணப்பர் பிறந்து ஆதிசங்கரரே போற்றும் அளவிற்கு பக்த மணியாக காட்சி தருகிறார்.
இதனை ஆதிசங்கரர் தனது சிவானந்த லகரியில் பதிவு செய்துள்ளார். அன்பின் வடிவமான இறைவனை அன்பினாலே பூஜிக்கும் அருமையான இரவே சிவராத்திரி ஆகும். இன்றைய நாளிலே நாம் இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு செய்வதன் மூலமாக பிரபஞ்ச ஆற்றல் முழுமையாக நமக்குள் இறங்கி வருகிறது. இத்தகைய நல்ல நாளில் நாம் இந்த சிவராத்திரி வழிபாட்டை செய்வதன் மூலம் நலம் யாவும் பெறுகிறோம்.அத்துடன் இன்றைய தினம் காஞ்சி காமகோடி பிடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ விஜயந்திர சரஸ்வதி சரஸ்வதி ஸ்வாமிகளின் ஜெயந்தி தினமாகும். இவ்வாறு இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார்.
முன்னதாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வாமிகளின் ஜெயந்தி முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி ஸ்ரீ மஹா பெரியவா கோவிலில் சிறப்பு ஹோமம் தீபாராதனை புஷ்பாஞ்சலி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இன்று மாலை எஸ் எம் கே திருமண மண்டபத்தில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் சித்த ஜாலம் என்ற தலைப்பில் பேசுகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *