• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

முதுகுளத்தூரில் சோழர் படை கட்டிய சிவன்கோவில்..,கல்லூரி மாணவியின் கள ஆய்வில் தகவல்..!

Byவிஷா

May 16, 2023

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் சோழர் படை கட்டிய சிவன் கோவில் உள்ளதாக கல்லூரி மாணவி ஒருவர் கள ஆய்வில் தெரிவித்துள்ளார்.
பால்கரையைச் சேர்ந்த ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு வழிகாட்டுதலில், தொல்லியல் இடங்களை நேரில் கள ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் டோனிகா, ஸ்ரீவிபின், முகம்மது சகாப்தீன், தீபிகாஸ்ரீ மற்றும் பார்னியாஸ்ரீ ஆகியோருடன் கள ஆய்வு செய்துள்ளார். அப்போது, வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள், சோழர்களின் வேலைக்கார மூன்றுகைப் படையினர் கட்டிய சிவன் கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்புகளைக் கண்டறிந்துள்ளார்.
மேலும் இது குறித்து மாணவி சிவரஞ்சனி கூறுகையில், “இந்தப் பெருங்கருணை என்ற ஊர், கி.பி. 12ஆம் நூற்றாண்டில் ராஜராஜப் பாண்டி நாட்டில் மதுராந்தக வளநாட்டின் புனைவாயிலிருக்கைப் பகுதியிலும், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் சுந்தரபாண்டிய வளநாட்டிலும் இருந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் இந்த ஊர் தடங்கழி, பெருங்கருணைச் சதுர்வேதிமங்கலம், மஹாகருணாகிராமம் மற்றும் சிலைமுக்குய நல்லூர் எனவும், ஆங்கிலேயர் காலத்தில் ‘வெள்ளந்துறையாகிய பெருங்கருணை’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் கண்மாய் தடங்கனி என அழைக்கப்படுவதன் மூலம், ஊரின் பழம்பெயரான தடங்கழி சற்று மருவி இன்றும் நிலைத்திருப்பதை அறிய முடிகிறது. இங்குள்ள கோயில் கல்வெட்டுகள் மத்திய தொல்லியல் துறையால் 1907இல் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இங்கு உள்ள சிவன், தற்போது ஸ்ரீஅகிலாண்ட ஈசுவரர் எனப்படுகிறார். இங்கு இரு கல்வெட்டுகள் உள்ளன. ‘புகழ்மாது விளங்க’ எனத் தொடங்கும் கி.பி. 1114ஆம் ஆண்டு கல்வெட்டு, முதலாம் குலோத்துங்கச் சோழனின் 44ஆம் ஆட்சி ஆண்டு முதல் கறியமுதிற்கும், ஆண்டுதோறும் வரும் நான்கு விஷ{ அயனங்களுக்கும், மாதந்தோறும் வரும் அமாவாசை பூஜைக்கும் வேளாண் காளையவியனான குலோத்துங்கச் சோழ அள்ளுநாடாழ்வான் என்பவர் 11 தடி அளவுள்ள துண்டு நிலங்களை கோயிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளார் என்கிறது.
இதில் அரைசறு கண்டி வயக்கல், மஞ்சளி வயக்கல், பெற்றாள் வயக்கல், செந்தி வயக்கல், சோழன் வயக்கல், தொண்டி வயக்கல் மற்றும் தொளர் வயக்கல் உள்ளிட்ட 12 வயக்கல் நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன. தரிசு நிலத்தினைச் சீர்படுத்தி, பயிர் செய்வதற்குரிய வகையில் பண்படுத்தப்பட்ட நிலம் வயக்கல் எனப்படும்.
இந்தக் கல்வெட்டில் சிவன் பெயர் திருவேளைக்கார மூன்றுகை ஈஸ்வரமுடைய மகாதேவர் என்று உள்ளது. இதன் மூலம் சோழர்களின் வேளைக்கார மூன்றுகைப் படையினர், இந்தக் கோயிலைக் கட்டினர் என்பது உறுதியாகிறது. திருநெல்வேலி மாவட்டம், மணப்படை வீடு என்ற ஊர் சிவன் கோயிலும், முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் மூன்றுகை படையால் கட்டப்பட்டது ஆகும்.
‘ஈழமுங் கொங்குங் சோழமண்டலமும் கொண்ட’ முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1267ஆம் ஆண்டு கல்வெட்டில், இந்த ஊர் சபைக்கு மன்னர் வழங்கிய சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்காக, உய்யவந்தானான சோழியத்தரையன் என்பவரின் ஏற்பாட்டில் சபை முதலிகள் கூடிய தகவலைத் தெரிவிக்கிறது. இதை இந்த ஊரின் சிற்பாசிரியர் அழகிய பாண்டிய ஆசாரியன் எழுதியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பது கல்வெட்டில் நாயிற்றுக் கிழமை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரில் கள மேற்பரப்பாய்வு செய்தபோது சிவப்பு, கருப்பு பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், சுடுமண் சக்கரம், மணி செய்யும் கற்கள், கல் குண்டு, இரும்புக் கசடுகள், சங்கு மற்றும் கல் வளையல் துண்டுகள், விலங்கின் பற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு இரும்பு உருக்காலை இருந்ததை இப்பகுதியில் கிடைத்த இரும்புக் கசடுகள் நிறுவுகின்றன. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் வரலாற்றின் இடைக்காலமான கி.பி. 12 முதல் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இந்த ஊரில் வரதராஜப் பெருமாள், பட்டாபிராமர், ஆயிரவல்லியம்மன் கோயில்களும் உள்ளன. தொல்லியல் தடயங்கள் மூலம் கி.பி. 12இல் இருந்து 19ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் இப்பகுதியில் ஒரு முக்கிய ஊராக இந்த ஊர் இருந்துள்ளதை அறிய முடிகிறது” எனத் தெரிவித்தார்.