கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஷவர்மா சாப்பிட்டவர்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இச்சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில தினங்களுக்குமுன் கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி தேவநந்தா என்பவர் உயிரிழந்தார். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதன் ஏதிரொலியாக தமிழகத்தில் உணவகங்களில் அதிரடி சோதனை நடைபெற்றுவருகிறது.குறிப்பாக ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டு போன பிரியாணி சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்டோர் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்திமயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவமாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் (வயது 22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
நேற்று இரவு 3 பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே உள்ள துரித உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டனர். பின்னர் விடுதிக்கு சென்றனர்.
அங்கு சக மாணவர்களுடன் பேசக்கொண்டிருந்த போது திடீரென பிரவீன் உள்ளிட்ட 3 பேருக்கும் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு அடுத்தடுத்து வாந்தி எடுத்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். சகமாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். கெட்டுப்போன சிக்கனை கொண்டு ஷவர்மா தயார் செய்யப்பட்டதா என்பது என சோதனை நடத்த உள்ளனர்.