விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை அதிக மக்கள் தொகை கொண்ட கிராமம். இங்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர் .மேலும் சாத்தூரிலிருந்து கோவில்பட்டி, சங்கரன் கோவில் செல்லும் மெயின் ரோட்டில் ஏழாயிரம்பண்ணை அமைந்துள்ளது .இங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் கோவில்பட்டி, ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், சங்கரன்கோவில், புளியங்குடி, அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை, இருக்கன்குடி, வெம்பக்கோட்டை, திருவேங்கடம், உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன.
ஆனால் இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கான எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக கழிப்பறைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. பயணிகள் உட்காருவதற்கான இருக்கை வசதி கிடையாது. தரையில் அமர வேண்டும் அல்லது நின்று கொண்டு பஸ்சுக்காக காத்திருக்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் பஸ்டாண்டில் உள்ள விளக்குகள் எரியாமல் இருளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பயணிகள் தினமும் அவதிப்படுகின்றனர்.





