• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கு கூட்டம்..,

Byமுகமதி

Mar 9, 2026

புதுக்கோட்டை எழில் நகர் தாஜ்ஹாலில் காலநிலை நீதி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை ரோஸ் ஆர்.எல்.ஹச்.பி டி.டி.எச் மற்றும் சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ரோஸ் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ஆதப்பன் வரவேற்றார்.

இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காலநிலை நிதி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கில் வம்பன் பயறு வகை ஆராய்ச்சி மைய தலைமை பேராசிரியர் மற்றும் தலைவர் மாரிமுத்து புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் தனபதி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் தீபக்குமார், முன்னோடி வங்கி மேலாளர் நந்தகுமார் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் முருகேசன்,உதவி மேலாண்மை இயக்குனர் ஸ்டாமின் கனிமொழி வழக்கறிஞர் சங்கீதா திருச்சி பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில் பேசிய நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் தீபக் குமார் குறிப்பிடுகையில் தற்போது காலநிலை மாற்றம் உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது, காலநிலை மாற்றத்தால் விவசாயிகளின் வருமானம் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு காலநிலை மாற்றத்தால் சரியான விலை கிடைப்பதில்லை. பொதுமக்கள் சூழ்நிலை சார்ந்து அதற்கு ஏற்றார் போல் வாழ வேண்டும். இயற்கையாக விளையக்கூடிய பொருட்களை சாப்பிட வேண்டும் சிறிய மாற்றங்கள் பெரிய பலனை தரும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீமைகளை தடுத்துக் கொள்ள வேண்டும் அதற்கு நாம் ஒவ்வொருவரும் காலநிலை மாற்றத்தை தடுக்க நமது வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய வம்பன் பயறு வகை ஆராய்ச்சி மையம் தலைமை பேராசிரியர் மற்றும் தலைவர் மாரிமுத்து பேசுகையில் காலநிலை மாற்றத்தால் புவி வெப்பம் ஆகும். பொதுமக்கள் மரக்கன்றுகளை அதிகளவு நடவு செய்ய வேண்டும் மரக்கன்றுகளை அதிகளவு நடவு செய்தால் கார்பன் அதிகம் வெளியிடுவதில்லை. நெல் பயிர் அதிக அளவு கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடுகிறது. 7,300 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் மண்ணில் உள்ளது .மண்வளம் கார்பன் அளவை பொருத்தே அமையும், பயிர்களை அதிக அளவு பயிர் செய்ய வேண்டும். இள மரங்கள் கார்பனை பிடித்து வைத்துக் கொள்ளும் மனிதன் ஒரு வருடத்தில் 11 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை ஏதோ வழியில் உட்கொண்டு வருகிறார்கள். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளது. சிறு தானிய பயிர்களை வளர்க்க வேண்டும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தொடர்பான இளைஞர் ஆலோசனை கூட்டத்தில், Youth for Ecological Sustainability (YES) இளைஞர் வலையமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் மாவட்டங்களில் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்வைத்து கருத்துகளை பகிர்ந்தனர். சத்யா, திவ்யா பாரதி, ஐஸ்வர், ஜோதிகா, சரவண பாபு, கலைவாணி, மனோஜ், தீபிகா ஆகியோர் நீர் மாசுபாடு மற்றும் நீர் தட்டுப்பாடு, பிளாஸ்டிக் மாசு போன்ற பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். மேலும் உயிரியல் பல்வகைமையை மற்றும் காடுகளை பாதுகாப்பது, நிலையான விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பின் அவசியம், காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவற்றையும் வலியுறுத்தினர். சமூக ஒற்றுமை மற்றும் பொதுமக்கள் பங்கேற்பின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றும், மாற்றத்தை உருவாக்க இளைஞர்களே முக்கிய சக்தி என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

காலநிலை மாற்றம் என்பது ஒரு எதிர்காலப் பிரச்சினை அல்ல; அது இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இந்த நிலையை மாற்றுவதற்கு நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மரங்களை அதிகமாக நடுதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், கார்பன் வெளியீட்டை குறைத்தல், நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல், நீரை குறைவாக பயன்படுத்தும் சிறுதானிய பயிர்களை ஊக்குவித்தல், இயற்கை விவசாயத்தை ஆதரித்தல், இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துதல் போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், துணி பைகளை பயன்படுத்துதல், குப்பைகளை பிரித்து ஒப்படைத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், கிராமக் குளங்களை பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தல் மற்றும் நீரை வீணாக்காமல் பயன்படுத்துதல் போன்ற நல்ல பழக்கங்களையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் இயற்கையை பாதுகாக்க ஆரம்பித்தால், நாளை நம் குழந்தைகள் பசுமையான கிராமங்களிலும், சுத்தமான காற்றிலும், போதுமான தண்ணீருடனும் வாழும் ஒரு உலகை காண முடியும். நாம் இன்று எடுக்கும் முடிவுகளே நாளைய தலைமுறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

முடிவில் ரோஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் பாலாஜி நன்றி கூறினார். கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள். இளம் பெண்கள் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.