கோவையில் முக்கிய நீராதாரங்களான நொய்யல் மற்றும் கவுசிகா நதி கரையோரங்களில் மரங்களை வளர்க்கும் விதமாக ருதம்பரா பவுண்டேஷன் சார்பாக விதைப்பந்து திருவிழா கோவை என்.ஜி.இராமசாமி நினைவு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவ,மாணவிகளுக்கு ஏற்படுத்தும் விதமாகவும்,பூமி வெப்பமயமாதலை தடுக்க மரங்களின் அவசியங்களை உணர்ந்து மரங்களை அதிகமாக்கும் நோக்கத்தில் கோவை ருதம்பரா பவுண்டேஷன், என்.ஜி.இராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து பிரம்மாண்ட விதைப்பந்து திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், ருதம்பரா பவுண்டேஷன் நிறுவனர் இயக்குனர் சித்த ஸ்ரீ ஈசன் குருஜி, என்.ஜி.ஆர். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவன்,தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மாநகர செயலாளர் ஆர் எஸ் தனபால்,கோவை மாநகராட்சி 54 வது மாமன்ற உறுப்பினர் பாக்கியம்,இயற்கை வேளாண்மை தங்கவேல் ஐயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் என்.ஜி.ஆர்.பள்ளி மற்றும் பிற பள்ளி கல்லூரி மாணவர்கள் இணைந்து விதைப்பந்துகள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து, சித்த ஸ்ரீ ஈசன் குருஜி மற்றும் தலைமையாசிரியர் சதாசிவன் ஆகியோர் கூறுகையில், ,மாணவ,மாணவிகளை ஒருங்கிணைத்து இந்த விதைப்பந்து திருவிழாவை நடத்தி வருவதாகவும்,பல்வேறு வகையான மூலிகைகள் கலந்த மண்ணுடன் நாட்டு விதைகளை கலந்து தயாரிக்கப்படும் விதைப்பந்துகள் கோவையை சோலையாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும், கோவையை சுற்றி உள்ள வனப்பகுதியிலும், குளம், குட்டைகளிலும் விதைப்பந்து வீசப்பட இருப்பதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பணிகளை செய்து வருவதாக கூறிய அவர்,இந்த ஆண்டு கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களான நொய்யல் மற்றும் கவுசிகா நதி கரையோங்களிலும் இந்த விதைப்பந்துகளை வீசி கரையோரங்களில் மரங்களை உருவாக்கும் முயற்சியை தொடர இருப்பதாக தெரிவித்தனர்.