புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று திரும்பும் “சாகர் சங்க்ரம்” பாய்மர படகு கடல் சாகச பயண தொடக்க விழா கடந்த 11ந் தேதி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நடந்தது.கடலுார் தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு, புதுவை தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு மாணவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

மாணவர்களின் கடல் சாகச பயணத்தை முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பயணத்தை 25 மாணவிகள் உட்பட 60 பேர் மேற்கொண்டனர். இந்த குழுவினருடன் 3 கடற்படை அதிகாரிகளும், 2 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றனர். பயணத்தில் 3 பாய்மரப் படகுகளில் மாணவர்கள் பயணித்தனர். கடல் சாகச பயண குழுவினர் 302 கி.மீ. துாரத்தை கடந்தனர்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த குழுவினர் கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்காலை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக இன்று புதுச்சேரிக்கு திரும்பினர்.அவர்களை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வரவேற்று வாழ்த்தினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ பாஸ்கர், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், தேசிய மாணவர் படை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.