தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும், பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு, ஊரடங்கு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான ஆணையை அரசு பிறப்பித்தது . அதன் அடிப்படையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிக்காத, வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பள்ளிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதை அடுத்த நேற்று வந்த பரிசோதனை முடிவில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் 8 மாணவர்கள் 2 ஆசிரியர்கள் உட்பட 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஆவூர் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 3 மாணவர்களுக்கும், ஐங்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பெரியகரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஊழியர் ஒருவருக்கும், தொரப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும், போளூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் நேற்று ஒரே நாளில் 8 மாணவர்களுக்கும், 2 ஆசிரியர்களும், ஒரு ஊழியருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ள பள்ளிகள் 3 நாட்கள் மூடவும், அப்பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.