சென்னை தாம்பரம் அடுத்த இராயப்ப நகரில் குடியிருப்பு வாசிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் தமிழர்களின் மறைந்து வரும் பாரம்பரிய வீர விளையாட்டுகளை பொதுமக்கள் முன்னிலையில் விளையாடி அனைவரையும் கவர்ந்தனர்.
சிலம்பம், மான் கொம்பு, சுருள்வாள், தீப்பந்தம் சுற்றுதல், களரி, கத்திச் சண்டை, வால் வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளுடன், பத்மாசனம், சிரசாசனம் போன்ற யோகாசனங்களையும் மாணவர்கள் சிறப்பாக செய்து காட்டினர். மாணவ, மாணவிகளின் தன்னம்பிக்கையும், ஒழுங்குமுறையும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இன்றைய நவீன விஞ்ஞான உலகில் அழிந்து வரும் நம் பாரம்பரிய கலைகளை மீட்டெடுப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், இத்தகைய வீர விளையாட்டுகளை ஆண்டுதோறும் அரங்கேற்றி வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக இந்த கலைகளை கற்பதில் ஆண்களை விட பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
கராத்தே, குங்ஃபூ போன்ற வெளிநாட்டு கலைகளுக்கே முன்னோடியாக தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் விளங்குகிறது என்றும், இவ்வகை கலைகளை கற்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றும், உடல் மற்றும் மன உறுதி மேம்படும் என்றும் மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.





