வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
நாகை அபிராமி அம்மன் திடலில் மக்கள் விரோத மத்திய பாஜக அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் மெய்னுலாபுதீன் தலைமை வைத்தார். துணைச் செயலாளர் ஆஷிக் அகமது மரைக்காயர் வரவேற்றார். தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் சாகா மாலிம் தொடக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கௌதமன், நகர செயலாளர் மாரிமுத்து ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியது:
வகுப்பு சட்டத் திருத்த நள்ளிரவில் கொண்டுவரப்பட்ட ஒரு மசோதா. ஏப். 2ம் தேதி வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜ அந்த நாளில் தான் வக்பு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. தமிழக முதல்வர் சிறுபான்மையிருக்கு அரணாக உள்ளார். அதனால் தான் இந்த சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சட்டசபையில் தனியாக தீர்மானம் கொண்டு வந்தார். தொடந்து இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நாடினோம். இதன் பலனாக இடைக்கால தடை கொண்டு வரப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் போது, தமிழக முதல்வர் மட்டும் விழித்துக் கொண்டு இதற்கு எதிராக குரல் கொடுத்தவர். உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணையாக இருப்போம். அதேபோல் நீங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஏப். 8ம் தேதி வரலாற்றில் முக்கியமான தீர்ப்பு வெளிவந்தது. தமிழக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது அனைவருக்கும் தெரியும். உங்கள் உணர்வில் கலந்துகொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதில் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் நவசாத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஓ எஸ் இப்ராஹிம். மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் சையது அனஸ் , நகராட்சி கவுன்சிலர் முகமது நத்தர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.