• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சன்னாசி மற்றும் நெடங்கமார் ரிஷி வடுச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா..,

ByS. SRIDHAR

Mar 22, 2026

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில், பழமை வாய்ந்த சன்னாசி, நெடங்கமார் ரிஷி, வடுவுச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவெடுத்தனர். இதற்காக கடந்த சில மாதங்களாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக, பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், யாகசாலையில் வைக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக கால பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை, மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க, பசு கன்று முன்னே செல்ல, புனித நீர் அடங்கிய கலசங்கள் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. கோபுர கலசத்தை புனித நீர் ஊற்றுவதற்கு முன்பு, வானில் கருட பகவான் வட்டமிட்டது அங்கிருந்த பக்தர்களை சிலிர்க்க வைத்தது. பின்னர் ராஜகோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மங்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளைக் கவனித்த கோயில் நிர்வாகம் சார்பில், கலந்து கொண்ட அனைத்துப் பக்தர்களுக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவால் மங்கனூர் கிராமமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.