• Tue. Feb 10th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது – கஸ்தூரி பேட்டி…

BySeenu

Feb 10, 2026

கோவை விமான நிலையத்தில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார்.

பெண்களுக்கு கிடைக்காத பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் கண்டித்து தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

கோவையிலேயே பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தி.மு.க அரசு தமிழ்நாட்டு மக்களை குடி நோயாளிகளாக மாற்றி விட்டதாகவும், தமிழ்நாடு அரசே மதுவிற்கு அடிமையாகி விட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் நெருங்குவதால் பார் லைசென்ஸ்கள் வழங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் நிதி திரட்டப்படுவதாக குற்றம் சாட்டினார்.
முதல்வர் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஜெபம் செய்வதாக கூறுவதாக விமர்சித்த அவர், “இரவு 8 மணிக்கு மேல் முதல்வர் ஸ்டாலினை வாக்கிங் போக சொல்லுங்கள்” என விமர்சனமாக பேசினார்.

புதிதாக நடிகர் தொடங்கிய கட்சிக்கே கூட்டம் கூடுவதாகவும், பிரதமர் மோடி மதுராந்தகத்தில் வந்த போது லட்சக் கணக்கான மக்கள் தன்னிச்சையாக திரண்டதாகவும், அது உண்மையான கூட்டம் எனவும் தெரிவித்தார். ஆளும் கட்சியின் கூட்டங்கள் எவ்வாறு திரட்டப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

கமல் பேசுவது புரியாமலேயே பலர் பாராட்டுகிறார்கள் என்றும், அவர் தெலுங்கு மொழியை இழிவுபடுத்தி உரையை தொடங்குவதாகவும் குற்றம்சாட்டினார். சினிமாவையும் அரசியலையும் குழப்பக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

த.வெ.க தலைவர் விஜய் மாநாடுகளுக்கு மாநாடு பேசிவிட்டு, அதன் பின்னர் அமைதியாகிவிடுகிறார் என்றும், எந்த பிரச்சனையிலும் அவர் கருத்து தெரிவிப்பதில்லை என்றும் விமர்சித்தார். ஆதவ் அர்ஜூனா பேசும் அளவிற்குக் கூட விஜய் பேசுவதில்லை என்றும் கூறினார்.

புதிய கட்சி என்பதால் விருப்ப மனுக்களை அவரது ரசிகர்கள் வாங்குவார்கள் என்றும், ஆனால் விருப்ப மனு வாங்குபவர்கள் மனுத் தாக்கல் செய்ய மாட்டார்கள், மனுத் தாக்கல் செய்பவர்கள் போட்டியிட மாட்டார்கள், போட்டியிடுபவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்றும் கஸ்தூரி கூறினார்.