தீபாவளி திருநாளை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இருளை அகற்றுவதே ஒளியின் இயல்பு, நீங்களும், நீங்கள் தொடும் அனைத்தும் பிரகாசமாக ஒளிர உங்களுக்குள் வெளிச்சம் பரவட்டும். உங்கள் தீபாவளி ஒளிமயமாக ஜொலிக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பான காணொளியில் சத்குரு பேசியுள்ளதாவது, “தீபாவளி என்பது ஒளியின் பண்டிகை, நமக்கு ஏன் ஒளி தேவையென்றால் வெளிச்சத்தில் மட்டுமே நாம் தெளிவாகப் பார்க்க முடியும். நம்மால் தெளிவாகப் பார்க்க முடியாவிட்டால், நம்மால் சிறப்பாக நடக்கவோ, ஓடவோ, வாழ்க்கையில் எதையும் சிறப்பாகச் செய்யவோ முடியாது.
ஆனால் தெளிவாகப் பார்ப்பது என்பது நம் கண்களால் மட்டும் அல்ல. நம் மனதிலும் நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும். நாம் விஷயங்களைத் தெளிவாகப் பார்க்கவில்லை என்றால், நாம் எங்கும் செல்ல முடியாது.

நம்முள்ளே உள்ள வெளிச்சத்தை யாராலும் அணைக்க முடியாத அளவிற்கு அதனை ஒளிரச் செய்யுங்கள். வெளியில் உள்ள விளக்கில் எண்ணெய் தீர்ந்தால் அது அணைந்துவிடும். ஆனால் உள்ளே இருக்கும் வெளிச்சம் ஒருபோதும் அணையக் விடக்கூடாது. நாம் பிரகாசித்தால், எல்லாம் தெளிவாக இருக்கும்.
தீபாவளியின் அர்த்தம் இதுதான். இந்தப் பண்டிகை ஒரு ஆழமான புரிதலில் இருந்து வந்தது. குளிர்காலத்தில், பூமியின் வடக்குக் கோளம் சூரியனை விட்டு விலகி, குளிர்ச்சியடையும் காலம் அது. அந்த நேரத்தில் போதுமான சூரிய ஒளி இல்லை. இதனால் மனத்திலும், உடலிலும் ஒரு மந்தநிலை ஏற்படும். இதை இந்திய மக்கள் உணர்ந்திருந்தனர். அதனால் தான் விவசாயிகளும் அந்தக் காலத்தில் விதைகளை விதைப்பதில்லை, ஏனெனில் அவை நன்றாக முளைக்காது, ஆற்றல் குறைந்திருக்கும். அனைத்தும் சற்று மந்தமாக இருக்கும். அதனால் அந்தக் காலத்தில் விளக்கேற்றும் பழக்கம் ஏற்பட்டது.
மேலும் இந்த பண்டிகை அச்சமற்ற, பேராசையற்ற, குற்றமற்ற மனிதர்களை உருவாக்கிய ஒரு நாகரிகத்தின் ஆழத்திலிருந்து வந்தது. அச்சம் என்பது இன்னும் நடக்காததைப் பற்றிய கற்பனைதான். உங்களின் உடல், மனம் உங்களின் ஆளுமையில் இருந்தால் நீங்கள் அச்சமற்றவராக இருப்பீர்கள். நீங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அரவணைக்கும் தன்மையில் இருந்தால் நீங்கள் எந்த தவறும் செய்யப் போவதில்லை, ஆகையால் குற்றமற்றவராக இருப்பீர்கள்.

மேலும் நீங்கள் உங்களுக்குள் நிறைவாக உணர்வதற்காக எதையும் செய்ய வேண்டிய தேவை இல்லாமல், இங்கே அமர்ந்திருக்கும் போதே நிறைவாக உணர்ந்தால் பேராசையற்ற தன்மையில் இருப்பீர்கள்.
எனவே அச்சமற்ற, குற்றமற்ற, பேராசையற்ற என்ற மூன்று தன்மைகளும் ஒவ்வொருவரிலும் உருவாக வேண்டும். இது உருவாகினால் நம்மால் ஒரு அற்புதமான மனிதகுலத்தை உருவாக்க முடியும். நாம் அற்புதமாக மாறினால், உலகமும் அற்புதமாக மாறும்.
இந்த தீபாவளியில், நம் உள்ளுக்குள் வெளிச்சம் பரவ, நம் வாழ்க்கை ஒளிர நாம் உறுதி எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.