• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குடியரசு தினவிழாவில் சத்குரு பேச்சு

BySeenu

Jan 26, 2025

பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரமே இனி உலகத்திற்கான எதிர்காலம்! என குடியரசு தினவிழாவில் சத்குரு பேசினார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பாக 76-வது குடியரசு தின விழா இன்று (ஜனவரி 26) கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சத்குரு அவர்கள் “பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரம் சாதாரண விஷயம் அல்ல. இனி இதுவே உலகத்தின் எதிர்காலம்.” எனப் பேசினார்.

விழாவில் பேசிய சத்குரு, “நம் நாட்டில் யார் அரசர், யார் அதிகாரத்தில் இருக்கிறார் என்பது பற்றி மக்கள் கவலைப்படவில்லை. இங்கு மக்கள் தான் அதிகாரத்தில் இருந்தனர். இது எப்போதுமே ஜனநாயக நாடாக இருந்து வந்துள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும் நமது கலாச்சாரமும், நாகரிகமும் மாறாமல் அப்படியே இருந்தது. அதுவே இந்த தேசத்தின் முக்கியமான மற்றும் தனித்துவமான அம்சமாகவும் இருக்கிறது.

கலாச்சார ரீதியாக ஆன்மீக பாதையில் செல்ல விரும்பிய யாவரும் கிழக்கை நோக்கியே வந்தார்கள். இங்கு கிழக்கு என்றால் இந்தியா. ஒரு காலத்தில் இங்கு 30% மக்கள் வெறுமனே உள்முகமாக திரும்பும் ஆன்மீக பாதைக்காக அர்ப்பணிக்கப்பட்டு இருந்தார்கள். இதை இப்போது நடைபெறும் கும்பமேளாவில் நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். மிகப்பெரிய அளவிலான மக்கள்தொகை வாழ்வில் வேறெந்த விஷயத்திற்காகவும் இல்லாமல், வெறுமனே உள்முகமாக திரும்புவதற்காக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நாம் ஏன் ஹிந்து என அழைக்கப்பட்டோம்? காரணம், வடக்கில் ஹிமாலய மலைப்பகுதி இருக்கிறது, தெற்கில் இந்தியபெருங்கடல் இருக்கிறது. இதனை ஹிந்து சாகரம் என அழைத்தோம். ஹிமாலய மலைப்பகுதியும், ஹிந்து சாகரமும் இணைந்து ஹிந்து என்றானது. இந்த நிலத்தை ‘ஹிந்து’ என அழைத்தோம், அதனால் இங்கு வாழ்ந்த மக்கள் ஹிந்துக்களானார்கள்.

இங்கு ஒரு குடும்பத்தில் இருக்கும் 5 மக்களுக்கு 10 கடவுளர்கள் இருக்கிறார்கள். இந்த வேற்றுமைகள் ஒருபோதும் நமக்கு பிரச்சனைக்கான அடித்தளமாக இருந்ததில்லை. இது சிறிய விஷயம் இல்லை. இன்று உலகம் இதனை கற்று வருகிறது. நம் பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமை தான் இனி உலகத்தின் எதிர்காலமாக இருக்க போகிறது. இது போன்று விஷயங்களில், பல்வேறு வகைகளில் இந்தியா தலைமை வகிக்கிறது”. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சூலூர் விமானப்படை நிலையத்தை சேர்ந்த குழுவினர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அதோடு ஈஷாவில் இருக்கும் ஆசிரமவாசிகள், தன்னார்வலர்கள், சுற்றுப்புற பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.