வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சுமார் 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட கறவை பசுமாடு வழங்க இருப்பதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தார்கள். ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து அந்த மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்புக் குழு இன்று (ஆக.31) வயநாட்டுக்குச் சென்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்கள்.
அவர்களில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனும் ஒருவர்.
வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரூபி மனோகரன், அவர்களில் சுமார் 100 குடும்பங்களுக்கு கறவை பசு மாடு வழங்குவதாக உறுதியளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் அந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு, மறுபடியும் பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.
நிறைய குடும்பத்தினர், இந்த நிலச்சரிவில் தங்களுடைய வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்து நிற்கிறார்கள். அவர்களில் 100 குடும்பங்களுக்கு கறவை பசு மாடுகள் வழங்க இருக்கிறேன்.
வயநாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் அப்பச்சனிடம், தகுதியான குடும்பங்களின் விவரங்களை கேட்டிருக்கிறேன். அவர் தகவல் விவரங்களைத் தந்ததும், அடுத்த 3 மாதத்துக்குள், 100 குடும்பங்களுக்கு கறவை பசு மாடுகளை வழங்க இருக்கிறேன். இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
வயநாட்டைப் பார்வையிட்ட காங்கிரஸ் கட்சியின் சிறப்புக் குழுவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கே.வி. தங்கபாலுவும் இடம்பெற்றிருந்தார். அவரும், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு, சென்னையில் உள்ள தன்னுடைய கல்லூரியில் இலவச கல்வி தருவதாக உறுதியளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ் எம்பி, ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், கோவை ஜெயபால், தாம்பரம் நாராயணன், கோவை சரவணன் உள்ளிட்டோரும், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
வயநாட்டில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.! 100 குடும்பங்களுக்கு கறவை பசுமாடு வழங்குவதாக அறிவிப்பு!!
