• Sat. Apr 20th, 2024

மலைக்கோயில்களில் ரோப் கார் வசதி..

Byகாயத்ரி

Nov 26, 2021

திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீா்மலை, திருக்கழுகுன்றம் கோயில்களுக்கு ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தமிழக அரசு சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கறிஞா் பி.ஜெகன்நாத் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சோளிங்கா் நரசிம்ம சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவித்தும் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மாநிலத்திலுள்ள 33 மலைக்கோயில்களில் கேபிள் ரோப் கார் வசதி ஏற்படுத்துவது, இயக்குவதற்கான நிதி நிலைத்தன்மை, பாதுகாப்பு தணிக்கை அறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, தொழில்நுட்ப சாத்தியக்கூறு தொடா்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து தாக்கல் செய்ய, இந்து சமய அறநிலையத் துறை, பொதுப் பணித்துறை, வருவாய் துறை, உள்துறை உள்ளிட்ட அரசுத் துறை செயலாளா்களுக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.


இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆா்.சண்முகசுந்தரம், பழனியில் ஒரு இடத்தில் தற்போது கேபிள் ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது. சோளிங்கா் மற்றும் அய்யா்மலை ஆகிய இரு இடங்களில் கேபிள் ரோப் கார் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


மேலும் திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீா்மலை, திருக்கழுகுன்றம் ஆகிய ஐந்து இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு கேபிள் ரோப் காா் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.இதைப்பதிவு செய்த நீதிபதிகள், பக்தா்களின் நலன் கருதி, சாத்தியமான இடங்களில் கேபிள் ரோப் கார் வசதி அல்லது பிற இடங்களில் உள்ள சாத்தியக் கூறுகளைக் கண்டறிய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *