கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து மகிளிப்பட்டி வழியாக மதுரை மேலூருக்கு காவிரி கூட்டு குடிநீர் குழாய் மூலம் காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை மகிளிப்பட்டி வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு பல லட்சக்கணக்கான லிட்டர் பீறிட்டு வெளியேறியது.
இதனால் சிந்தலவாடியில் இருந்து புனவாசிப்பட்டி வரை செல்லும் சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சாலையை உடைத்துக் கொண்டு பீறிட்டு வெளியேறிய குடிநீர் அருகில் இருந்த வெற்றிலை மற்றும் வாழை தோட்டங்களில் புகுந்து குளம் போல் காட்சியளிக்கிறது.
ஏற்கனவே மகளிப்பட்டி வழியாக செல்லும் ராட்சத குழாய்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு சாலை அரிப்பு ஏற்பட்டும் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தும் வருகின்றது.இதனால் தங்களுக்கு பெருத்த சேதம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மணி நேரத்திற்கு மேலாகியும் தடுத்து நிறுத்தவில்லை எனவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.