திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பொன்னாங்கண்ணிப்பட்டியில் வருடாந்தோறும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள எட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புலிவலம், மற்றும் அதன் சுற்று வட்டார வன சரக பகுதியில் முயல் வேட்டையாடி வந்து திருவிழாவை கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று முயல் வேட்டையாட சென்ற 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்றுள்ளனர். திருச்சி வனத்துறையினர் வேட்டையாடச் சென்ற ஆறு நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய டாடா ஏசி வேன், இரு சக்கர வாகனங்களை திருச்சி வனசரகத்தினர் பிடித்துள்ளனர்,
தொடர்ந்து அவர்களை திருச்சி வனசரக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் துறையூர் முதல் திருச்சி செல்லும் சாலையான பெரமங்கலம் பகுதியில் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வனத்துறையினரின் வாகனத்தை வழிமறித்து நிறுத்தி அவர்களை விடுவிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் நடைபெறுவதை அறிந்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் நிகழ்விடத்திற்கு வந்து வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருச்சிக்கு அழைத்துச் சென்ற ஆறு நபர்களை பொதுமக்களுடன் அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது . போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.