மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக, சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை ‘பிங்க்’ வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

சிங்கார சென்னை 2.0இல் எழில்மிகு சென்னை திட்டத்தின் கீழ், ரிப்பன் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.ரூ.1.75 கோடியில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுதந்திர தினம், குடியரசு தினம் மட்டுமின்றி மற்ற சிறப்பு நாட்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதை ஒளிரூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இளஞ்சிவப்பு வண்ணத்தில் ஒளிரூட்டப்பட்டது. மார்பக புற்றுநோய் சிகிச்சை குறித்த தகவல் மையத்தை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தனர்.
பின்னர் பேசிய மா. சுப்பிரமணியன், இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடத்துக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகக் கூறினார். 13 நிமிடத்துக்கு ஒருவர் இதனால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டிலேயே சென்னை மாநகராட்சியில்தான் அதிநவீன கருவிகள் மூலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சைகள் அளிக்கப் படுவதாகக் கூறினார்.