• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ரீவைண்ட் : எம்.ஜி.ஆர் பழிவாங்கிய இருவர் ?

கண்ணதாசன் எம்ஜிஆர் குறித்து உள்ளும் புறமும் என்ற புத்தகத்தில் பதிவு செய்திருந்த கருத்துகளின் ஒரு பகுதி.இது முழுக்க முழுக்க கண்ணதாசன் தான் பார்த்த எம்ஜிஆர் குறித்து எழுதியது.
25 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் எம்ஜிஆர் மிகுந்த கஷ்ட திசையில் இருந்தார். ஒரு மனிதன் கஷ்ட திசையில் இருந்தார் என்பது கேலிக்கு உரிய விஷயம் அல்ல. எல்லாருமே சேற்றுக்கு பிறகு சந்தனத்தை கண்டவர்கள்தான்.
ஆனால் கஷ்டகாலத்தில் உதவி செய்தவனை மறந்து விடுவதும், தன்னிடம் அவன் உதவிக்கு வரும்போது சித்திரவதை செய்வதும் கொடிய பாவமாகும். செய்நன்றி கொன்றவருக்கு உய்வே கிடையாது என்கிறார் வள்ளுவர். எம்ஜிஆர் கஷ்டப்பட்ட காலங்களில் அவருக்கு உதவியவர்களில் முக்கியமானவர் ஜூபிடர் பிக்சர்ஸ் மானேஜராக இருந்தவர் டி.எஸ்.வெங்கிடசாமி அவர்கள் இவர் யு.ஆர் ஜீவரத்தினத்தின் கணவராகும். எனக்கு பாட்டெழுத முதல் முதலில் சந்தர்ப்பம் கொடுத்தவர் அவர்தான் எனது வனவாசத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
பாகவதர் நடித்த அசோக்குமாரில் ஒரு சிறு வேஷத்தில் நடித்த எம்ஜிஆரை ஜுபிடர் பிக்சர்ஸ் தங்கள் ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக போட்டார்கள்.
அந்த படத்துக்கு வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. அவரது வசனம் படத்தில் ஒரு சிறப்பான அம்சம் அதையொட்டிய காலங்களில் ஜூபிட்டர்ஸ் பிக்சர்ஸுக்கு பாட்டெழுத நானும் போயிருந்தேன். அங்கே மானேஜர் அறைக்கு நேராக இருந்த நாற்காலிகளில் தோழர் சக்கரபாணியும் எம்ஜியாரும் உட்கார்ந்து இருப்பார்கள். நானும் அங்கே உட்கார்ந்து இருப்பேன்.
எம்ஜிஆரை வெகு நேரம் காக்க வைக்காமல் சீக்கிரம் கூப்பிட்டு பணம் கொடுத்து அனுப்புவார் வெங்கிடசாமி அவர் மற்றவர்களை மதிக்க தெரிந்தவர். சாதாரண துணை நடிகரை கூட அவமானப்படுத்த மாட்டார். எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார். இருபொருள் பட பேசுவார். அப்போது அவரது செல்வாக்கு கொடிகட்டி பறந்த காலம் அது.
ஜீவரத்தினத்தை திருமணம் செய்துகொண்ட பின்பு ஜூபிட்டர்ஸ் பிக்சர்ஸை விட்டு விலகினார். திருமணத்திற்கு பிறகு ஜீவரத்தினம் அதிக படங்களில் நடிக்கவில்லை.சென்னைக்கு வந்து வெங்கிடசாமி ஒன்றிரண்டு சிறிய படங்களை எடுத்தார் அவை தோல்வி அடைந்து நஷ்டப்பட்டு கஷ்டப்பட்டார் .
முன்பு தான் எம்ஜிஆருக்கு உதவி செய்ததை மனதில் வைத்து கொண்டு எம்ஜியார் புகழ் உச்சத்தில் இருந்தபோது அவரை வைத்து படம் எடுக்க அவரை அணுகினார். வழக்கம்போல எம்ஜியார் செயற்கையாக சிறிது அவரை உற்சாகபடுத்தினார். பிரமாதமான நம்பிக்கைகளை உண்டாக்கினார்.

வெங்கிடசாமி அதை நம்பி கடன் வாங்கி ஒரு படத்தை ஆரம்பித்தார் படம் நாலாயிரம் அடிகளே வளர்ந்தது. அதன் பிறகு வெங்கிடசாமியையும் தெருத்திண்ணையில் உட்கார வைத்து விட்டார் எம்ஜிஆர். செல்வாக்கோடும் சுய மரியாதையோடும் வாழ்ந்தவர் வெங்கடசாமி. அவரது கஷ்ட காலம் எம்ஜிஆர் வீட்டு படிக்கட்டில் பிச்சைகாரனை போல நிற்கவேண்டி வந்தது. கடன் பட்டு கஷ்டப்பட்ட வெங்கிடசாமியை வேலைக்கு வைத்து கொள்வதாக கூறி சத்யா ஸ்டுடியோவில் சேர்த்துக்கொண்டார்.
எந்த வெங்கிடசாமி முன்னால் அவர் கைகட்டி நின்றாரோ அதே வெங்கிடசாமியை தன்முன் கைகட்டி நிற்க வைத்ததில் அவருக்கு பரம திருப்தி. காலத்தையும் கடவுளையும் நொந்து கொண்டு காலம் கழித்தார் வெங்கிடசாமி. அவரது மனநோய் உடல் நோயாக மாறியது.
அந்த நேரத்தில் ஒரு தவறும் செய்யாத அவரை தொழிலாளர்களோடு சேர்ந்து கொண்டார் என்று கூறி கால்ணா கூட கொடுக்காமல் வெளியேற்றினார் எம்ஜிஆர். அதிலிருந்து அவரது நோய் முற்றிற்று . இரண்டொரு முறை ‘என்னை வந்து சந்தித்தார். திடீர் என்று அவர் மாரடைப்பால் இறந்தார் என்று செய்தி வந்தது.
எம்ஜிஆர் விரும்பி இருந்தால் தான் காய்ந்து கிடந்த போது தண்ணீர் ஊற்றிய அந்த உத்தமனை காப்பாற்றி இருக்கலாம். பழி வாங்கும் வெறியில் அவரது மரணத்திற்கு காரணமானார்.
இப்போது அவரது மனைவி ஜீவரத்தினம் நாடங்களில் நடித்து தனது வயது வந்த இரு பெண்களையும் காப்பாற்றி வருகிறார்.

கட்சி மேடைகளில் அவருக்கு இடம் கொடுத்து திராவிட கழக பாடல்களையே பாடச்சொல்லி இப்போதும் அவருக்கு உதவி செய்து கொண்டிருப்பவர் கலைஞர் கருணாநிதி.
ஒரு வெங்கிடசாமியை மட்டுமா பழிவாங்கினார் எம்ஜிஆர்? படம் தயாரிப்பதற்காக சினிமா தொழிலுக்கு ஏன் வருகிறார்கள். அதையும் ஒரு முறையான தொழிலாக கருதி பணம் போட்டு பயன் அடையவே வருகிறார்கள். அப்படி வருகிறவர்களில் நூற்றுக்கு 99 வீதம் பேர் கைப்பணம் பாதி கடன் பாதி என்ற நிலையில்தான் வருகிறார்கள்
எனக்கு தெரிய என் முதலாளி டி.ஆர்.எஸ் ஒருவர்தான் துவக்கத்தில் இருந்தே காலணா கடன் வாங்காமல் படம் எடுத்தவர். சாதாரணமாக ஒரு படத்துக்கு 7 லட்சத்தில் இருந்து 20 லட்சம் வரை செலவாகும்.
அவ்வளவு பெரும் பணம் யாரிடமும் இருந்ததில்லை.கடன் பட்டு கஷ்டப்பட்டாவது படத்தை முடித்து ஒன்றிரண்டாவது மிஞ்சதா என்று எதிர்பார்க்கும் பாவப்பட்ட ஜென்மங்கள்தான் பட தயாரிப்பாளர்கள் அவர்கள் எம்ஜியாரை வைத்து படம் எடுக்க தொடங்கினால் ஆபத்து.
அவர்களுக்குள் எதாவது இலாபம் வருவது போல் தோன்றினால் அவர்களின் கழுத்தை அறுத்து இரத்தம் குடிக்க எம்ஜிஆர் தயங்க மாட்டார்.
ஒரே ஒரு தயாரிப்பாளருக்கு மட்டும்தான் அவர் பயப்படுவார். காரணம் எம்ஜிஆர் எதாவது இடக்கு செய்தால் அவர் தூக்கி எறிந்து விடுவார். அவரை தவிர வேறு எவரையும் பேய் பிடித்து ஆட்டுவது போல் ஆட்டுவார். நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.

பர்மா இந்தோ சீனா போன்ற நாடுகளில் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை என்று தெரிந்த சிலர் தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு, 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தார்கள். அவர்களில் ஒருவர் கோல்டன் நாயுடு. சைகோனில் இருந்த தனது பிரமாண்டமான மரம் அறுக்கும் தொழிற்சாலையை விற்றுவிட்டு சென்னைக்கு வந்தார் அவர்.
கோடம்பாக்கத்தில் கோல்டன் ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோ கட்டினார். என்னிடத்தில் மிகவும் அன்புடையவர். ஓய்வாக இருக்கும்போதெல்லாம் என்னிடம் போன் செய்து வரச்சொல்லி பேசிக்கொண்டிருப்பார்.
அவர் சில படங்களுக்கு பண உதவியும் செய்து கொண்டிருந்தார். அதில் ஒன்று பாக்தாத் திருடன் என்ற படம். பெரும்பாலான எம்ஜிஆர் படங்கள் 10 ரூபாயில் விலை போனால் செலவு 20 ரூபாயாக இருக்கும். அந்த நிலைக்கு பாக்தாத் திருடனையும் கொண்டுவந்து விட்டார் எம்ஜிஆர்.
30 ஆயிரம் ரூபாய்க்கு செட் போட்டிருப்பார்கள் மறுநாளே அதை மாற்றி பது செட் போடச்சொல்வார். ஏற்க்கனவே எடுத்ததை தூக்கி போட்டுவிட்டு புதிதாக எடுக்க சொல்வார். மானம் மரியாதையோடு வாழ்ந்த கோல்டன் நாயுடு துடித்து போனார்.

படம் முடியவேண்டிய நேரத்தில் 5 லட்சம் நஷ்டம் என்று கணக்கிடப்பட்டது. மேலும் 2 லட்சம் ரூபாய் இருந்தால்தானே படத்தை முடிக்கலாம் என்று எம்ஜிஆர் கூறிவிட்டார். அழுதே அறியாத நாயுடு வாய் விட்டு அழுது விட்டார்
ஒரு நாள் காலையில் எம்ஜிஆரை பார்த்து கெஞ்சினார் எம்ஜிஆர் படத்தை முடிக்க மறுத்து விட்டார். அடப்பாவி நான் பாபர் ஆகிவிடுவேன் போலிருக்கிறதே என்று புலம்பி கொண்டே வீட்டிற்கு வந்தார். ரத்த கொதிப்பு அதிகமாகி விட்டது. பாத்ரூமுக்கு போனார்.. ஒரு மணி நேரமாகியும் அவர் வரவில்லை.
வீட்டில் உள்ளவர்கள் பயந்து கொண்டே பாத்ரும் கதவை திறந்தார்கள். உள்ளே மாரடைப்பால் இறந்து கிடந்தார் நாயுடு. அவரது குடும்பம் கதறி அழுத கோரக்காட்சி எவராலும் மறக்க முடியாது. இருதயம் சினிமா உலகமே அவரது வீட்டில் கூடிவிட்டது.
ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோரும் எம்ஜியாரை சபித்து கொண்டிருந்தார்கள். அப்போது எம்ஜியார் ஒரு ஆள் உயர மாலையை தூக்கி கொண்டு வந்தாரே பார்க்கலாம். அலட்சியமாக அந்த மாலையை நாயுடுவின் பிணத்தின் மீது போட்டார். ஆளை கொன்றுவிட்டு மாலையை கொண்டு அடியாட்களோடு வந்திருக்கிறான் என்று ஆள் மாத்தி ஆள் மாத்தி ஒவ்வொருவரும் சத்தம் போட்டு சொன்னார்கள்.
எம்ஜிஆரும் அடியாட்களும் எல்லோரோடும் சண்டை போட்டார்கள்.

உடனே நாயுடுவின் ஆட்களுக்கு கோபம் வந்தது. அடியாட்களும் எம்ஜியாரும் ஒரே காரில் ஏறி புறப்பட்டு போனார்கள். இப்போதும் விஜயராகவாச்சாரி ரோட்டில் உள்ள நாயுடுவின் வீட்டை பார்க்கும் போது எனக்கு கண்ணில் கண்ணீர் வருகிறது அது இப்போது ஒரு ஓட்டலாக காட்சி அளிக்கிறது. கோல்டன் ஸ்டுடியோ களை மண்டி கிடக்கிறது.