கோவை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% குறைக்கப்பட்டுள்ளது ரத்து செய்து மீண்டும் அதனை 25% நிர்ணயம் செய்ய வேண்டும்,

நில அளவைத் துறையில் வெளி முகமை ஒப்பந்த அடிப்படையில் ஆன பணி நியமனங்களை கைவிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்த்த வேண்டும் அவர்களின் வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் விதிகளை திருத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
அதன்படி கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் 200க்கும் மேற்பட்டோர் பந்தல் அமைத்து வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அரசு தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகளை பல மாதங்களாக வலியுறுத்தி வரும் நிலையில் தேர்தல் நெருங்கி வரும் பொழுதாவது அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.






