• Sat. Apr 27th, 2024

பழிவாங்கும் நடவடிக்கை… அதிமுகவை அழிக்க முடியாது… தங்கமணி காட்டம்!

Byமதி

Dec 16, 2021

அதிமுகவை அழிக்கும் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி பள்ளிபாளையம் அருகேயுள்ள கோவிந்தம்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகவும், முறைகேடுகள் மூலம் சொத்து சேர்த்ததாக புகார்கள் வெளியானது. இதையடுத்து இன்று அதிகாலை வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு முன்புற கதவை தாழிட்டு தங்களது விசாரணையை தொடங்கினர்.

பள்ளிபாளையம் மட்டுமின்றி தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதில், ரூ.2,37,34,458 பணம், 1.130 கிலோகிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத ரூ.2,16,37,000 பணம், சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுகவை அழிக்கும் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்துவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் மூலம் அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் கூறினார். மேலும் அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள், அது முடியாது என்றும் அவர் தெரிவித்தார். எனது வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை. பிட்காயினில் முதலீடு என்பது தவறான தகவல், பிட்காயின் என்னவென்றே எனக்கு தெரியாது. நீதியின் மீது நம்பிக்கை உள்ளது. நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *