நாகையில் நலவாரிய பதிவிற்கு விஏஓ பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகப்பட்டினத்திற்கு வந்த விழிப்புணர்வு பயணத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த 3ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து கட்சி சாரா தொழிற்சங்கங்களின் உரிமை மீட்பு பயணம் தொடங்கியது. இந்த விழிப்புணர்வு பயணம் வரும் 28ம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது. விழிப்புணர்வு பயணம் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்றனர். அதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என தனியான துறையை உருவாக்க வேண்டும். நலவாரிய பதிவிற்கு விஏஓ பரிந்துரையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்க இஎஸ்ஐ அமல்படுத்த வேண்டும். நலவாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.