பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் அம்மாயி-பாட்டன் மூதாதையர்கள் வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், அறுவடை திருநாளான பொங்கலுக்கு பிறகு தைபூசத்திற்கு பின்பு, கிராம மக்கள் மூதாதையர்களை நினைவு கூறி வழிபடுவது வழக்கம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன அடையாளம் தெரியாத மூதாதையர்கள் கரடுமுரடான நிலங்களை திருத்தியும், நெருப்பு, சக்கரம் உள்ளிட்ட உபகரணங்களை கண்டுபிடித்து, தற்போது வாழும் வாழ்க்கையை செம்மை படுத்தி உள்ளனர். அதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களது வழிபாடு நடக்கிறது. நள்ளிரவில் மண்ணாலான உருவம் செய்து, கன்னி கழியாத பெண்கள் தலையில் சுமந்து வந்து அவர்களை ஊரின் நடுவில் பந்தல் அமைத்து வழிபடுகின்றனர். அவர்களுக்கு மாவிளக்கு செய்து பூஜை செய்கின்றனர். பின்னர் விடியும் வரை காவல் காத்து காலையில் சூரிய ஒளியில் நீர்நிலைகளில் மேளம் தாளங்கள் முழங்க விட்டு வந்துவிடுவர். நள்ளிரவில் விழாக்கோலம் பூண்டிருக்கும். முன்னதாக பெண்களால் கும்மி, கோலாட்டங்கள் ஆடினர். நாட்டுப்புறப்பாடல்களும் பாடப்பட்டது.
