தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் நாளை மறுதினம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வழங்கப்படும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சீ புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்ய வாய்ப்புள்ளது.
கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய இடங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையில் மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த இடங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ அளிக்கப்பட்டு இருக்கிறது.
நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இந்த பகுதிகளுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை காலமான கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் நேற்று வரையில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 24 செ.மீ. ஆகும். ஆனால் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இயல்பை விட 46 சதவீதம் அதிகரித்து, 36 செ.மீ. என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. இதில் கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் இயல்பை விட மழை அதிகம் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.