• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

5 இளம் படைப்பாளிகளுக்கு ரமேஷ் பிரேதன் நினைவு விருது..,

BySeenu

Dec 23, 2025

கோவையில் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழில் எழுதி வரும் 5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது வழங்கப்பட்டது.

கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு சார்பில், தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் கலைநயமிக்க விருதுச் சிற்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

நடப்பாண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த புதுச்சேரி எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார். எனவே, நடப்பாண்டு விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனின் விருப்பப்படியே அவரது நினைவுடன் பல்வேறு தளங்களிலும் இயங்கி வரும் இளம் படைப்பாளிகளான தேவி லிங்கம், சஜு, செல்வகுமார் பேச்சிமுத்து, அசோக் ராம்ராஜ், அழகிய மணவாளன் ஆகிய 5 இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டது.இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கம், கலைநயமிக்க விருதுச் சிற்பம் ஆகியவை வழங்கப்பட்டன.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்க அரங்கில் டிசம்பர் 21-ம் தேதி மாலை நடைபெற்ற விழாவில் விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ரமேஷ் பிரேதன் குறித்து எழுத்தாளர் அகரமுதல்வன் இயக்கியுள்ள ‘அம்மை அப்பன் அயோனிகன்’ எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இந்த விருது விழாவில் தெலுங்கு எழுத்தாளர் மதுராந்தகம் நரேந்திரா, கன்னட எழுத்தாளர் கவிஞர் ஜெயந்த் காய்கினி, எழுத்தாளர் ஆஸ்டின் செளந்தர், எழுத்தாளர் அகரமுதல்வன் ஆகியோருடன் எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.