கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் மற்றும் இளைஞரணி மாநில தலைவர் எஸ் ஜி சூர்யா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ராம சீனிவாசன் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு தன்னை பொறுப்பாளராக நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
வல்லபாய் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சி அவருக்கு எதுவும் செய்யவில்லை ஆனால் பாஜக செய்கிறது என்று தமிழ்நாடு தலைவர்களுக்கும் பாஜக மரியாதை செய்து வருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த விவகாரத்தில் மாநில அரசு தயக்கப்படாமல் மத்திய அரசுடன் இணைந்து தகவல்களை பரிமாறி வேலை செய்து வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்றார். கோவையில் கூட கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிரவாத தாக்குதல் இல்லை என்று திமுக அரசாங்கம் பேசியது ஆனால் NIA சோதனைக்கு பிறகு தான் அது வேறு மாதிரியாக மாறியது என தெரிவித்தார். NIA தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சோதனைகள் செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஆனால் தமிழகத்தில் NIA அலுவலகமே வேண்டாம் என்று பேசும் பேச்சுக்களும் இருந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியம், எங்காவது ஒரு இடத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்தால் ஒரு சதவிகிதம் ஜிடிபி குறைகிறது என்று கூறுகிறார்கள் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் என்றார். 1998 கோவை குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவை மீண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
தீவிரவாத தாக்குதல்கள் மிரட்டல்கள் என்று 6000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் மன்மோகன் சிங் காலத்தில் பத்து ஆண்டுகள் இருந்தது பிறகு மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இவையெல்லாம் பெரிய அபாயம் இல்லாமல் இருக்கிறது மாவோயிஷ்ட் தீவிரவாதம் இல்லை என்ற நிலைமைக்கு அமித்ஷா கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.தமிழகத்தில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் வந்துவிட்டது என்ற அறிகுறிக்கு கூட இடம் கொடுத்து விடாமல் ஆரம்பத்திலேயே அதனை நசுக்கி விட வேண்டும் என்று தெரிவித்தார்.
2026ல் திமுகவை எதிர்ப்பவர்களும் திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று நினைப்பவர்களும் ஒரே கூட்டணிக்கு வருவார்கள் என்று தெரிவித்தார். விஜய் உடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு அதனை ஊடகத்திடம் கூற முடியாது அதற்கு எனக்கு அதிகாரமும் இல்லை திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு அனைவருக்கும் OpenCall கொடுக்கிறோம் என்று தெரிவித்தார்.
பாஜக வலுவாக இல்லை என்பதை மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறிய அவர் மாநில தலைவரின் பிரச்சாரத்திலும் மக்கள் ஆதரவு நன்றாக உள்ளது என தெரிவித்தார். பிகார் தேர்தல் முடிந்தவுடன் மோடிக்கும் அமித்ஷாவிற்கு அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான் என தெரிவித்தார்.
கிட்னி தொடர்பான சம்பவத்தில் பாஜக சிபிஐ விசாரணை கோருமா? என்ற கேள்விக்கு கிட்னி திருட்டு என்று சொல்லக்கூடாது கிட்னி முறைகேடு என்று கூற வேண்டும் என்கிறார்கள், நோயாளிகளை நோயாளிகள் என்று கூறக்கூடாது மருத்துவ பயனாளிகள் என்று கூற வேண்டும் என்று கூறுகிறார்கள் என்று கூறிய அவர் பயனாளிகள் என்றால் பயனாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு தான் செல்ல வேண்டும் புதிய புதிய பயனாளிகள் உருவாக வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் அப்படி என்றால் நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்ட செல்லலாமா? என கேள்வி எழுப்பினார். மது அருந்துபவர்களை குடி நோயாளிகள் என்று மருத்துவர்கள் கூறுகிறாரகள் அப்படி பார்த்தால் அவர்கள் என்ன குடி பயனாளியா என கேள்வி எழுப்பினார். மேலும் கிட்னி சம்பவத்தில் இது தொடர்பாக நீதிமன்றத்தின் வாயிலாக சிபிஐ விசாரணை கிடைத்தால் மகிழ்ச்சி தான் என தெரிவித்தார்.
தலித் மக்கள் பற்றி ராகுல் காந்தி பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பாபாசாகே, அம்பேத்கருக்கும் எதிராக செயல்பட்டது காங்கிரஸ் கட்சி என்றும் அம்பேத்கரை ஜெயிக்க விடக்கூடாது என்று காங்கிரஸ் நினைத்தார்கள் அம்பேத்கருக்கு எங்கும் நினைவுச் சின்னம் வைக்க கூடாது என்று நினைத்தார்கள் அம்பேத்கர் இறந்த பிறகு அவரது பூத உடலை எடுத்து வருவதற்கு கூட பல்வேறு சிக்கல்களை விளைவித்தது காங்கிரஸ்தான் என்று குறிப்பிட்டார். அம்பேத்கர் வாழும் பொழுது அவருக்கு உரிய மரியாதை அளிக்காமல் அவர் இறந்த பிறகு தலித் மக்களுக்கு ஆதரவாக பேசுவது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள் என குறிப்பிட்டார். இந்தியா முழுவதும் நன்றாக அறியப்பட்ட பல்வேறு தலித் தலைவர்கள் பாஜக ஆதரவாளர்கள் தான் தற்பொழுது இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
கரூர் சம்பவத்தில் தார்மீக பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளதா என்பதுதான் எங்களுடைய கேள்வி என்றும் அரசு அனுமதி பெற்று நடத்தக்கூடிய நிகழ்வில் இது போன்ற துரதிஷ்டவசமான சம்பவம் நிகழும் பொழுது அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய தார்மீக பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றார்.
பாஜகவில் சூர்யா இளைஞரணி மாநாடு நடத்தினால் அது போன்று இருக்காது என்றும் பாஜகவில் மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் இளைஞர்களை கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் அவர்களுக்கு உள்ளது அந்த சிஸ்டம் இன்னும் விஜய் கட்சிக்கு உருவாகவில்லை என்று கூறினார்.
பின்னர் பேசிய இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதிக்குள் பல்வேறு நிகச்சிகளை திட்டமிட்டுள்ளதாகவும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாதயாத்திரை நடத்துவது, படேல் பற்றி பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை உட்பட அனைத்து தலைவர்களின் சிலைகளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.