காங்கிரஸ் பேரியக்கம் நாடு முழுவதும் பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி, வாக்காளர்களின் பெயர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றில் இந்திய தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டு வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக கூறி காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

அதேபோல குலசேகரம் அரசு மூடு சந்திப்பில் திருவட்டார் வட்டார ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் திருவட்டார் வட்டாரத் தலைவர் விமல் ஷெர்லின் சிங் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் மற்றும் ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பாரத் ஜோடா யாத்திரை மூலம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சென்று மாபெரும் எழுச்சியினை ஏற்படுத்தினார். அதேபோல இந்தியா தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் நடைபெறும் போராட்டமும் நாடு முழுவதும் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போது பக்கத்து மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் முறைகேடு நமது மாநிலத்தில் நடக்காது என கூற முடியாது. அது இங்கே நடப்பதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. பீகாரில் 67 லட்சம் வாக்காளர்களை நீக்கி உள்ளனர்.

பெங்களூரில் நடைபெற்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகளை மாற்றியுள்ளனர். இந்த வாக்கு திருட்டை மக்களிடம் கொண்டு செல்வது நமது கடமை ஒவ்வொரு பூத்திலும் நாம் பூத்துக் கமிட்டியை வலிமை படுத்த வேண்டும், எந்த திருட்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை, வருகிற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம், நல்லாட்சியினை கொண்டு வருவோம், 2029-ல் நாம் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் ரத்தினகுமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், விவசாய பிரிவு தலைவர் எபனேசர், மேற்கு மாவட்ட RGPRS தலைவர் ஜிஜி, மாநில பொதுச் செயலாளர்கள் ஆஸ்கர் பிரடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் முடித்து வைத்தார்.
மழை கொட்டிய நிலையிலும் காங்கிரஸ் கட்சியின் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஓட்டு திருட்டை கண்டித்து நடந்த போராட்டம் பொது மக்களின் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது.













; ?>)
; ?>)
; ?>)