• Wed. Dec 11th, 2024

ரயில்வேயில் பணியிடங்கள் திடீரென ரத்து…

Byகாயத்ரி

Apr 27, 2022

ரயில்வேயில் செலவுகளை குறைப்பதற்காக பணியிடங்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் ரயில்வே வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி ஸ்டோர் கலாசி, பெயிண்டர், கார்பெண்டர், தோட்டக்காரர், உதவி சமையலாளர், திருப்பணியாளர் போன்றவர்களை மறு பணி அமர்ந்து செய்யலாம். தேவைப்பட்டால் வேலைகளை அவுட்சோர்சிங் செய்யலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இடிபி துறை, புள்ளியல் துறை, பாதுகாப்பு படையில் பணியில் இருப்பவர்களை வேறு பணிகளில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது.

பணியிடமாற்றம் செய்யப்படும் அனைவருக்கும் அவர்கள் ஏற்கனவே பெற்று வந்த அதே ஊதியம் வழங்கப்படும் என்றும் பணி பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதனால் இந்தப் பணியில் உள்ள எவரும் உடனடியாக வேலை இழக்க மாட்டார்கள். ஆனால் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என்பதால் ரயில்வே துறையில் எதிர்கால வேலைவாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் குறையும். இது இளைஞர்களை பாதிக்கும்.

உலகிலேயே மிக அதிக பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனமாக இந்திய ரயில்வே திகழ்கின்றது. இந்திய ரயில்வேயில் 14 லட்சம் பணியிடங்கள் உள்ளது. அவற்றில் 1.49 லட்சம் தொடக்கநிலை பணியிடங்கள் காலியாக இருப்பதாக தொடர்வண்டி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் அதை செய்ய முன்வராத ரயில்வே வாரியம் இருக்கும் பணியிடங்களை ரத்து செய்ய முயல்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய ரயில்வேயின் ஒட்டு மொத்த வருமானத்தில் 67% ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு செலவிடப்படுவதாகவும், செலவை குறைக்க முக்கியத்துவமற்ற பணிகளை ரத்து செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.